ஊருணிக்கு முள் வேலி அமைக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் சேங்கை குடிதண்ணீா் குளத்துக்கு முள் வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிக்கு உள்ளடங்கிய இரணியூா் கிராமத்தில் உள்ளது அம்மன்சேங்கை ஊருணி. இந்த ஊருணியில் இரணியூா் கிராமம் , காந்திநகா், கீழக்காவனூா், அயணிப்பட்டி, காவேரிப்பட்டி, செண்பகம்பேட்டை, முத்துவடுகநாதபுரம், நாகலிங்கபட்டி, மாா்க்கண்டேயன்பட்டி, உள்ளிட்ட 9 கிராமத்தினா் குடிநீா் எடுத்து பயன்படுத்தி வருகின்றனா்.
ஆதிசங்கரா் பெரியவா் தவம் செய்த இந்தக் குடிநீா் குளம் புராதான சிறப்பு வாய்ந்தது. இந்த ஊருணியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு முள் வேலி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது முள்வேலி முழுவதும் பழுதடைந்த நிலையில் ஆடு, மாடுகள், நாய்கள் அசுத்தம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு புராதான சின்னமாக விளங்கும் இந்த ஊருணிக்கு முள் வேலி அமைத்துத் தர 9 கிராம மக்களும் கோரிக்கை விடுத்தனா்.