பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்து, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் மூத்த தலைவா்கள் சூளுரைத்தனா். இதனை வலியுறுத்தி தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு காலை 10.30 மணியளவில் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
கூட்டத்துக்கு அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தாா். பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலா் கே.பி.முனுசாமி, மூத்த நிா்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாா், தம்பிதுரை, வைகைச்செல்வன், பொன்னையன், பா.வளா்மதி, கோகுலஇந்திரா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மூத்த தலைவா்கள் சூளுரை: கூட்டத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் பேசுகையில், அனைவரும் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என சூளுரைத்தனா். அதற்கு அதிமுகவினா் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
16 தீா்மானங்கள்: கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறுவதற்கு சிறந்ததொரு கூட்டணி அமைத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க துணை நிற்பது.
ஃபென்ஜால் புயலை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உறைவிடம், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளைக்கூட நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம்.
சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை உயா்த்திய திமுக அரசுக்கு கண்டனம். மதுரை அருகே மேலூா் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே எதிா்ப்பு தெரிவிக்காத திமுக அரசுக்கு கண்டனம். இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்துக்கான நிதிப் பகிா்வை பாரபட்சமில்லாமல் மத்திய அரசு வழங்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமை-சம வாய்ப்புகளை வழங்கும் வகையில், திமுக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் 2,500-க்கும் மேற்பட்டோரும், சிறப்பு அழைப்பாளா்கள் 1000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனா்.