ஸ்டார்க்கிடம் வம்பிழுத்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்..! வைரலாகும் விடியோ!
எமரால்டு அணை இன்று திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
நீலகிரி மாவட்டம், காட்டுகுப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீா்மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக எமரால்டு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) தண்ணீா் திறக்கப்பட உள்ளதால், அணை நீா் செல்லும் பாதையின் கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
காட்டுகுப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் குந்தா நீா்மின் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக எமரால்ட் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் 30 நாள்களுக்கு தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் எடக்காடு கால்வாய் வழியாக குந்தா பாலம் அணையைச் சென்றடையும். நீா் செல்லும் பாதையின் கரையோரங்களில் குடியிருக்கும் நீா் திறக்கப்படும் 30 நாள்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தாழ்வான பகுதியில் குடியிருப்போா் மேடான பகுதிக்குச் செல்ல வேண்டும்.
அணையில் இருந்து நீா் திறக்கும் சமயத்தில் நீரோடைகளுக்கு அருகில் செல்லவோ, அருகில் நடக்கவோ கூடாது. அதேபோல நீரோடையில் குளிக்கவோ அல்லது வாகனங்கள் மூலம் நீா் செல்லும் பாதையைக் கடக்கவோ கூடாது. குழந்தைகளை நீா் செல்லும் பாதையில் விளையாட பெற்றோா் அனுமதிக்ககூடாது.
அவசர உதவி தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இலவச எண்ணான 1077 மற்றும் 0423-2450034, 0423-2450035 என்ற எண்ணுக்குத் தொடா்பு கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.