படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!
எம்ஜிஆருக்குப் போட்டியா? வெள்ளித்திரையில் மு.க. முத்துவின் ஏற்றமும் இறக்கமும்!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க. முத்து, கருணாநிதியின் கலை வாரிசாக மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு மாற்று சக்தியாகவும் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திரையுலகில் களமிறக்கப்பட்டார் என்பார்கள்.
இதுவே அவரது வீழ்ச்சிக்கும்் காரணமாக அமைந்துவிட்டதாகக் கூறுவோரும் உண்டு.
திரைப்படங்களில் தோன்றி எம்ஜிஆர் போலவே நடித்து அசத்தி, தொடக்கத்தில் புகழின் உச்சிக்கும் சென்றார். 1970 ஆம் ஆண்டுகாலத்தில் திரையுலகில் கோலோச்சிய மு.க. முத்துவின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர்.
தனது மகனை வைத்துப் படம் எடுக்க முடிவு செய்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, பல விஷயங்களுக்கும் எம்ஜிஆர் பாணியைப் பின்பற்றினார். மு.க. முத்துவும் பார்க்க நல்ல ஸ்டைலாக இருந்தார். குரல் வளம் அவருக்கு பலம் சேர்த்தது. அவரது சொந்தக் குரலில் வசனம் பேசி, பாடல்களையும் பாடினார்.
முதலில், திமுக பிரசாரக் கூட்டங்களில், எம்ஜிஆர் போலத் தோன்றி வந்த மு.க. முத்து, எம்ஜிஆர் போலவே திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். பிள்ளையோ பிள்ளை படத்தின் பெயர் கூட, உங்கள் வீட்டுப் பிள்ளை படத்தின் பெயரை ஒட்டியே வைக்கப்பட்டிருந்ததாகவும் எம்ஜிஆருக்கு பாடல்களை எழுதும் வாலியை வைத்தே இப்படத்தின் பாடல்கள் எழுதப்பட்டதாகவும் பலரும் கூறுவார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடக்க விழாவின்போது பேசிய மா.பொ. சிவஞானம், கதாநாயகனாக அறிமுகமாகும் மு.க. முத்து, நடிகர் எம்ஜிஆரையே தன்னுடைய குருவாக நினைத்துக்கொண்டிருப்பதாகக் தன்னிடம் கூறியதாகக் குறிப்பிட்டார்.
அந்த நிகழ்ச்சியில் மேடையில் இருந்த எம்ஜிஆர், தொடர்ந்து பேசும்போது, தம்பி முத்து என்னை குருவாக நினைப்பதாகக் கூறினார். அதனைக் கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. ஆனால், அவர் என்னிடம் ஒருநாள்கூட நடிப்புக் கற்றுக் கொள்ள வரவில்லை. என்னுடைய படங்களைப் பார்த்து அவருக்கு நடிக்க வேண்டும் என்று விருப்பம் வந்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் என்று ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வழியில் பயணிப்பதே வெற்றியைத் தரும். அவர் தனது தனித்துவத்துடன் நடித்து, நடிப்புத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என எம்ஜிஆர் பேசியதாகக் கூறுவார்கள்.
பிள்ளையோ பிள்ளை படம் வெளியானபோது, பல கிராமங்களில் முத்தமிழ்ச் செல்வன் முத்து என்ற பெயரில் ரசிகர் மன்றங்கள் தோன்றின. முத்துவுக்கு ஆதரவாக பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அது மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.
சில கிராமங்களில் எம்ஜிஆர் ரசிகர் மன்றங்கள், முத்து ரசிகர் மன்றமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள். முக்கிய நாளிதழ்களில் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் முதலிடம் பிடித்து வந்த நிலையில், சிலநேரம் அது முத்துவின் செய்தியாகவும் மாறியது.
தமிழ்நாடு முதல்வராக மு. கருணாநிதி பொறுப்பேற்றதும், அவர் தனது மகனைக் கதாநாயகன் ஆக்கி பிள்ளையோ பிள்ளை படத்தை வெளியிட்டார். ஆரம்ப காலத்தில் முத்து ரசிகர்களுக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. எம்ஜிஆர் படம் வெளியாகும் திரையரங்குகள் தாக்கப்பட்டன. 1972ஆம் ஆண்டு பிள்ளையோ பிள்ளை வெளியானபோது, படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்த எம்ஜிஆர் நடிப்பில் உருவான உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
மு.க. முத்துவின் வளர்ச்சிக்காக, பின்னால் இருந்து செய்யப்பட்ட சில வேலைகளை எம்ஜிஆர் நேரடியாக எதிர்கொண்டதாகவே பலரும் கூறுகிறார்கள்.
பிள்ளையோ பிள்ளை படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துவிட்டு, எம்ஜிஆர், பாடலாசிரியர் வாலியை, நாளை எனது வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தாராம். மறுநாள் காலை எம்ஜிஆர் வீட்டுக்கு சென்ற வாலிக்கு, உணவுப் பரிமாறிக் கொண்டே, என்ன வாலி, முத்தமிழும் தோன்றியது மு.க. முத்துவிடமா? என்று எம்ஜிஆர் கேட்டதாக வாலியின் புத்தகங்களில் பகிரப்பட்டுள்ளது.
அதற்கு வாலி, அண்ணா, மு.க. முத்து வளரும் கலைஞர். அவரை புகழ்ந்து பாடல் எழுதும்படி கேட்டுக் கொண்டார்கள். ஏற்கனவே நீங்கள் பல முறை சொல்லியிருக்கிறீர்கள், உங்கள் வார்த்தைக்கு பலம் இருக்கு, நீங்கள் எப்போதும் வாழ்த்தியே பாடல்களை எழுத வேண்டும் என்று. அதனால்தான் வாழ்த்தும்படி ஒரு பாடலை எழுதினேன் என்றேன். என் நிலைமையை எம்ஜிஆர் ஓரளவுக்குப் புரிந்துகொண்டார் என்றாலும், அவருக்கு நான் சொன்ன பதிலில் சமாதானம் ஏற்படவில்லை என்பது அவரது முகபாவமே காட்டிக்கொடுத்தது. அந்தப் பாடலை, எம்ஜிஆருக்காக எழுதியிருந்தால், அது இன்னும் அதிகமாக புகழ்பெற்றிருக்குமே என்று அவர் நினைத்திருந்ததே அதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்றும் வாலி குறிப்பிட்டதாக புத்தகங்கள் மேற்கோள்காட்டுகின்றன.
இன்னும் சொல்லப்போனால், பிள்ளையோ பிள்ளை படத்தின் கதைகூட, எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளையின் நகல்தான் என்றுகூட சொல்வோர் உண்டு. அதாவது பிள்ளையோ பிள்ளை படத்திலும் முத்துவுக்கு இரட்டை வேடம். அதுபோல, இப்படத்தில் நடிகர் சிவாஜியின் அறிமுகப் படமாக பராசக்தி படத்தில் வந்த சிறப்பான ஒரு நீதிமன்றக் காட்சி போலவும் மு.க. முத்து நீதிமன்றத்தில் வசனம் பேசும் காட்சியை கருணாநிதி அமைத்திருந்தார்.
அடுத்தடுத்து முத்து நடிப்பில் வெளியான படங்களிலும், எம்ஜிஆருடன் இணைந்து நடித்த கதாநாயகிகளும், தயாரிப்பாளர்களும் இடம்பெற்றிருந்தனர். நடிகைகள் லட்சுமி, மஞ்சுளா, ஜி. சகுந்தலா, வெண்ணிற ஆடை நிர்மலா, சந்திரகலா, பத்மபிரியா போன்ற நாயகிகள் முத்துவுடன் இணைந்து நடித்தனர்.
முதல் படம் வெளியான பிறகு அடுத்தடுத்து ஆறு படங்கள் வெளியாகின. கடைசியாக எல்லாம் அவளே படம் வெளியாகி மூன்று மாதங்களில் தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்றார். அதன் பிறகு, மு.க. முத்துவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. அதற்குக் காரணம், எந்தப் படத் தயாரிப்பாளரும், எம்ஜிஆரின் பகை வருமோ என்று நினைத்துக்கொண்டு படமெடுக்க விரும்பவில்லை.
1972 ஆம் ஆண்டு தொடங்கிய முத்துவின் திரையுலகப் பயணம், சட்டப்பேரவையின் ஆட்சிக்காலம் போன்று வெறும் 5 ஆண்டுகளில் அதாவது 1977ஆம் ஆண்டுடன் முடிந்தது.
ஒருவேளை, எம்ஜிஆருக்கு மாற்று போல இல்லாமல், கருணாநிதியின் மகன் என்ற பெயருடன், மற்ற கதாநாயகன்களைப் போல தனித்துவமான ஸ்டைல், நடிப்பு, அடையாளத்துடன் மு.க. முத்துவும் திரையுலகில் அறிமுகமாகியிருந்தால், அவரது ஸ்டைலான நடிப்புக்கும், இனிமையான குரலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி, திரையுலகில் அவருக்கென ஒரு சாம்ராஜ்யத்தையேகூட உருவாக்கியிருக்கலாம்; காலம் ஒரு கதையெழுதிவிட்டது!
Regarding the claim that M.K. Muthu was unable to shine because he was made to act like MGR and was fielded against MGR..
இதையும் படிக்க.. பன்முகத் திறன் கொண்ட மு.க. முத்து!