``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்ப...
எலக்ட்ரோ ஹோமியோபதி: ``ரூ.30000 கொடுத்தால் டாக்டர் பட்டம்'' - ம.பி சட்டமன்றத்தில் சர்ச்சை
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மாநில அரசுக்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி என்ற ஒரு மருத்துவ படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவ படிப்புக்கு மாநில அரசு எந்த வித அங்கீகாரமும் கொடுக்கவில்லை. ஹோமியோபதி மருத்துவ கவுன்சில், மாநில அரசு, சுகாதாரத்துறை என எந்த அரசு துறையாலும் இந்த படிப்புக்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் இப்படிப்பை இப்பல்கலைக்கழகத்தின் ஸ்டடி சென்டர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறது.

"இந்த பட்டப்படிப்பு படிக்காமல் ரூ.30 ஆயிரம் கொடுத்து எளிதில் இந்த பட்டத்தை வாங்கிவிட முடியும். இப்படி டாக்டர் பட்டத்தை வாங்கிக்கொண்டு சிலர் நோயாளிகளுக்கு சிகிச்சையும் கொடுத்து வருகின்றனர்." என்ற குற்றச்சாட்டு மத்திய பிரதேசத்தில் எழுந்துள்ளது.
இப்பிரச்னை மத்திய பிரதேச சட்டமன்றத்தில் எதிரொலித்தது. இதில் பேசிய மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங்,
''எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்புக்கு எந்த வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இந்த படிப்பை படித்தவர்கள் எங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர் என்று தெரியவில்லை. எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவில்லை'' என்று தெரிவித்தார்.
இதுவரை இந்த படிப்பை 294 பேர் படித்துள்ளனர். சமீபத்தில் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள பந்தனா என்ற இடத்தில் எலக்ட்ரோ ஹோமியோபதி படித்த நபர் 14 வயது சிறுவனுக்கு தவறான ஊசி போட்டதில் அச்சிறுவன் பரிதாபமாக இறந்து போனான்.

இதே போன்று இந்தூரில் எலக்ட்ரோ ஹோமியோபதி படித்த பிரதீப் பட்டேல் என்பவர் காய்ச்சலுடன் வந்த 41 வயது நபருக்கு சிகிச்சையளித்ததில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
19 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரோ ஹோமியோபதிக்கு இந்தியாவில் சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை. அதனை படித்தவர்கள் நோயாளிகளுக்கு சட்டப்பூர்வமாக சிகிச்சையளிக்கவோ, மருந்துகளை பரிந்துரைக்கவோ அல்லது ஊசி போடவோ முடியாது என்ற நிலை உள்ளது.
`நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், எந்த மருத்துவப் பயிற்சியும், அங்கீகாரமும் இல்லாமல், ஒரு அரசுப் பல்கலைக் கழகம் இது போன்ற போலி சான்றிதழ்களை மலிவு விலைக்கு கொடுக்கிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


















