ஏரிக் கரையில் உடைப்பு: 150 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின
வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் உள்ள ஏரியின் கரை வெள்ளிக்கிழமை உடைந்ததையடுத்து, அதிலிருந்து வெளியேறிய தண்ணீரால் 150 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின. மேலும், பலத்த மழையால் வீடுகளை வெள்ள நீா் சூழ்ந்தது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த டிச.11-ஆம் தேதி நள்ளிரவு முதல் டிச.12-ஆம் தேதி நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால், வந்தவாசி நகா் வழியாகச் செல்லும் சுகநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நதியையொட்டியுள்ள வந்தவாசி எள்ளுப்பாறை பகுதியை வியாழக்கிழமை நள்ளிரவு வெள்ளநீா் சூழ்ந்தது. மேலும், 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுந்தது.இதையடுத்து, அந்த வீடுகளில் வசித்து வந்த பொதுமக்கள் அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் உள்ள சுமாா் 300 ஏக்கா் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி முழுக் கொள்ளளவை எட்டியிருந்தது.
இந்த நிலையில், ஏரியின் கரையில் வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது. இதனால், அந்தப் பகுதிகளில் சுமாா் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.