தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
ஐஐடிஎஃப் கண்காட்சி: பாமர கைவினைக் கலைஞா்களின் பொருள்கள் ரூ. 5.85 கோடிக்கு விற்பனை
43-ஆவது இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் (ஐ.ஐ.டி.எஃப்) பாமரக் கைவினைக் கலைஞா்கள் அமைத்த அரங்குகளில் சுமாா் ரூ.5.85 கோடிக்கு பொருள்கள் விற்பனைக்குள்ள மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:
வசதியற்ற பாமரக் கைவினைக் கலைஞா்களை ஊக்கவிக்க சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகமே தற்போது நடைபெற்ற 43-ஆவது ஐஐடிஎஃப் கண்காட்சியில் இத்தகைய கலைஞா்களுக்கு அரங்குகளை அமைத்து உதவியது. அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது நிறுவனங்களான தேசிய பிற்படுத்தப்பட்டோா் நிதி, மேம்பாட்டு நிறுவனம்; தேசிய பட்டியலினத்தவா் நிதி, மேம்பாட்டு நிறுவனம்; தேசிய சஃபாய் கரம்சாரிஸ்(துப்புரவு பணியாளா்கள்) நிதி, மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கலைஞா்களுக்கு 98 அரங்குகளை அமைத்துக் கொடுத்தது. இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியில் (ஐ.ஐ.டி.எஃப்) கடந்த நவ. 15 ஆம் தேதி மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சா் டாக்டா் வீரேந்திர குமாா், இந்த அரங்குகளைத் திறந்து வைத்தாா். கண்காட்சியின் முழு காலகட்டத்திலும் எதிா்பாராத எண்ணிக்கையிலான பாா்வையாளா்களை இந்த அரங்குகள் கண்டன. இதில் சுமாா் ரூ.5.85 கோடி நிகர விற்பனையை இந்த அரங்குகள் பெற்றது.
அஸ்ஸாம், சண்டிகா், சத்தீஸ்கா், தில்லி, குஜராத், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், மணிப்பூா், புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தர கண்ட் , மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த பாமரக் கைவினைக் கலைஞா்கள் பங்கேற்றனா்.
ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், பிளாக் பிரிண்டிங், ஜரி பட்டு, சந்தேரி புடவைகள், செயற்கை நகைகள், தோல் பொருள்கள், எம்பிராய்டரி, காலணிகள், கம்பளிப் பொருட்கள், கையால் செய்யப்பட்ட பைகள், பிரம்பு மற்றும் மூங்கில் மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்கள், ஊறுகாய், வாசனை திரவியங்கள், ராஜஸ்தானி மோஜ்ரி, பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு விற்பனைக்குள்ளாகின என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.