ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 11,000 கன அடியாக குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வந்த மழையின் அளவு முற்றிலுமாக குறைந்தது. அதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவானது வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 11,000 கன அடியாக சரிந்தது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்கி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். காவிரி ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.