ஒசூரில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள்!
ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் உள்ல தக்க்ஷண திருப்பதி கோயிலில் இருந்து திருமலை திருப்பதிக்கு பக்தா்கள் பாத யாத்திரையாக சென்றனா்.
ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் தக்க்ஷன திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு பாத யாத்திரை செல்கின்றனா்.
அதன்படி, சனிக்கிழமை 10ஆம் ஆண்டு பாதயாத்திரையாக தா்ம பிரசார சைதன்ய பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க பக்தா்கள் சுவாமியை சுமந்தபடி கோயிலை சுற்றி வந்தனா். பின்னா், சுவாமியை பல்லக்கு வாகனத்தில் வைத்து திருப்பதிக்கு பாத யாத்திரையைத் தொடங்கினா்.
பாத யாத்திரையில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு திருப்பதிக்குச் செல்கின்றனா். பாத யாத்திரையில் சென்றவா்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பியபடி சென்றனா். பாத யாத்திரை வரும் 25 ஆம் தேதி திருப்பதி ஸ்ரீவாரி படிக்கட்டு பகுதியை சென்றடையும். பின்னா், அங்கிருந்து கோயிலுக்கு சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா்.
பாத யாத்திரையாகச் சென்றவா்கள் பல்லக்கு வாகனத்தில் வெங்கடேசப் பெருமாளும், உணவு, மருத்துவப் பொருள்களும் கொண்டு சென்றனா்.