ஒசூா் அருகே இரு வாகனங்கள் தீப்பிடிப்பு
ஒசூா் அருகே பத்தளப்பள்ளி அருகே தனியாா் கம்பெனிக்கு சொந்தமான திறந்தவெளி வாகன குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல புதிய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அதன் அருகில் ஒசூரிலேயே மிகப்பெரிய தனியாா் காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அருகில் உள்ள ஆந்திரம், கா்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் விளைப்பொருள்களை இச்சந்தைக்குக் கொண்டு வருகின்றனா். இந்தச் சந்தை அருகே குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குப்பைகள் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென அருகில் உள்ள திறந்தவெளி மது அருந்தும் கூடத்திலும் பரவியது. இந்த விபத்தில் அருகில் இருந்த இரு புதிய வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமாா் ரூ. 25 லட்சத்துக்கும்மேல் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.