தீ விபத்துகள்: மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பிரிவு உருவாக்க வலியுறுத்தல்
ஒன் பை டூ: “டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது யார்?”
பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க
“நிச்சயமாக அ.தி.மு.க-தான், அதிலென்ன சந்தேகம்... ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்த சமயத்தில், தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், அந்தச் சட்டத்திருத்தத்தை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை நிபந்தனைகளின்றி ஆதரித்துப் பேசினார். டெல்லியில் சட்டத்திருத்தத்தை ஆதரித்துவிட்டு, தமிழ்நாட்டில் இரட்டை வேடம் போடுகிறது அ.தி.மு.க. சட்டத்துறை அமைச்சராக இருந்த தம்பிதுரைக்கு, மதுரையில் சுரங்கம் வரக் காரணமே அந்தச் சட்டத்திருத்தம்தான் என்று தெரியாது என்றால், குழந்தைகூட நம்பாது. டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மக்கள் போராடியபோது, களத்துக்கே நேரடியாகச் சென்ற எங்கள் அமைச்சர், ‘மக்களுடன் அரசு நிற்கும்’ என்று உத்தரவாதம் கொடுத்தார். முதல்வரும் சுரங்க ஏல உரிமத்தை ரத்துசெய்யச் சொல்லி ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார். பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருக்கிறார். இப்போதும் சொல்கிறேன்... தமிழகத்தில் தளபதி ஸ்டாலினின் ஆட்சி நடக்கும்வரை, டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் மதுரைக்குள் நுழைய முடியாது. இரட்டை வேட அ.தி.மு.க மக்களிடம் அசிங்கப்படுவார்கள்!”
சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க
“இரட்டை வேடம் என்றாலே அது தி.மு.க அரசுதான். மதுரையில் சுரங்கம் வரப்போகிறது என்பது ஆளும் தி.மு.க அரசுக்கு நன்றாகத் தெரியும். சுரங்க ஏலம் தொடர்பாக மாநில அரசுக்கு, மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. அப்போதெல்லாம் ‘சுரங்கம் வந்தால் நாம் கல்லாகட்டலாம்’ என்று காத்திருந்த தி.மு.க அரசு, எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. முன்பு, டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கும் இதேபோல ‘தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டோம்’ என்று சொன்னார் இன்றைய முதல்வர் ஸ்டாலின். நாடாளுமன்றத்தில் தம்பிதுரை எந்த இடத்திலும் மதுரையில் சுரங்கம் வருவதை ஆதரித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், தி.மு.க-வின் தவறுகள் வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தில், நாங்கள் சுரங்கம் வருவதற்கு ஆதரவு தெரிவித்ததுபோலப் பொய்யான தகவலைப் பரப்பிவருகின்றனர் தி.மு.க-வினர். தன்னெழுச்சியாக மக்கள் போராடத் தொடங்கி பிரச்னை கட்டுக்கடங்காமல் போனதும், வேறு வழியில்லாமல் கடிதம் எழுதுவது, தனித் தீர்மானம் நிறைவேற்றுவது என அடுத்தடுத்து நாடகங்களை அரங்கேற்றிவருகிறார் ஸ்டாலின். இவர்களின் இரட்டை வேடத்தை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்!”