ஒரு வாரத்துக்கு பின்னா் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்
வங்க கடலில் நிலை கொண்டிருந்த புயல் கரையை கடந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்வளம், மீனவா் நலத் துறையினரின் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியதையடுத்து மீனவா்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா்.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடந்த ஒரு வாரமாக மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் புயல் கரையை கடந்ததையடுத்து, மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
ஒரு வாரத்துக்குப் பின்னா் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் இலங்கை கடற்படை அச்சுறுத்தலின்றி இந்திய-இலங்கை எல்லைப் பகுதியில் மீன்பிடிக்கும் வகையில் இந்திய கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மீனவச் சங்க பொதுச் செயலா் என்.ஜே.போஸ் கோரிக்கை விடுத்தாா்.