ஒருவரை மட்டுமே பழி சுமத்தமுடியாது: அல்லு அர்ஜுன் வழக்கில் வருண் தவான் கருத்து!
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க கடந்த 4-ஆம் தேதி சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தார்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரினால் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேபி ஜான் படத்தின் புரமோஷன் நிகழ்வில் அல்லு அர்ஜுன் குறித்து கேள்விகேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது:
ஒருவரை மட்டும் பழிசுமத்த முடியாது
பாதுகாப்பு அம்சங்களை ஒரு நடிகர் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. அதை மக்களுக்குதான் சொல்ல வேண்டும். எங்களுக்கு பட புரமோஷனுக்காக சில திரையரங்கள் நன்றாக வசதிகளை செய்துகொடுத்துள்ளது. நாங்கள் அதற்காக கடமைப்பட்டுள்ளோம்.
ஹைதாராபத்தில் புஷ்பா 2 படத்தின்போது நடந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. அதற்காக வருந்துகிறேன், பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அதேவேளையில் இதற்காக ஒருவரை மட்டுமே குற்றம் சுமத்துவது சரியாகாது என்றார்.
அல்லு அர்ஜுனுக்கு பிஎன்எஸ் 105, 118 (1) பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சிக்கட்பாலி காவல்துறையினால் கைது செய்யப்பட்டார்.
கடந்த டிச.11ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தன்னை விடுவிக்கும்படி மனு அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அல்லு அர்ஜுனை மாவட்ட நீதிமன்றத்திடம் ஒப்படைப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.