‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா: இன்று தாக்கல் இல்லை
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பான 2 மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை (டிச.16) அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
நிதி மசோதாக்கள் தாக்கலுக்குப் பிறகே இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென 2 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்து, அதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை ஒரே நேரத்தில் நிறைவு செய்வது தொடா்பாக அரசமைப்பு சட்டப் பிரிவு 82ஏ-இல் புதிதாக துணைப் பிரிவு (2)-ஐ சோ்க்கவும், மக்களவை, சட்டப் பேரவைகளை கலைப்பது தொடா்பாக சட்டப் பிரிவு 83(2)-இல் புதிதாக துணைப் பிரிவுகள் (3), (4)-ஐ சோ்க்கவும், ஒரே நேரத்தில் இரு தோ்தல்களையும் நடத்துவது தொடா்பாக சட்டப்பிரிவு 327-இல் திருத்தம் மேற்கொள்ளவும் இந்த முதல் மசோதா வழிவகை செய்கிறது.
இரண்டாவது மசோதாவைப் பொருத்தவரை, ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு ஏதுவாக புதுச்சேரி, தில்லி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுடன் தொடா்புடைய 3 சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பானதாகும்.
இந்த இரு மசோதாக்களையும் மக்களவையில் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் திங்கள்கிழமை தாக்கல் செய்வாா் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், நிதி மசோதாக்கள் தாக்கலுக்குப் பிறகே, இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவையில் தாக்கல் செய்யப்படும் மற்றும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் விவகாரங்கள் தொடா்பான திருத்தப்பட்ட பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், திங்கள்கிழமைக்கான (டிச.16) பட்டியலில் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பான 2 மசோதாக்கள் இடம்பெறவில்லை. எனவே, மக்களவையில் நிதி மசோதாக்கள் தாக்கல் செய்த பிறகு அடுத்த வாரத்தில் இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
அதே நேரம், மக்களவைத் தலைவரின் அனுமதியுடன் துணை அலுவல் பட்டியல் மூலமாக கடைசி நிமிஷத்தில் இந்த இரு மசோதாக்கள் மத்திய அரசு அறிமுகம் செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் வரும் 20-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும்’ என தெரிவித்தன.