"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்க...
`ஒரே வீட்டில் இரண்டு சமையல்'- உணவில் வெங்காயம் பூண்டு சேர்க்காத மனைவி; விவாகரத்தில் முடிந்த பிரச்னை!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவர் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கேசவ் மனைவி உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் பயன்படுத்தாமல் சமையல் செய்ய ஆரம்பித்தார். இது கேசவ் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் வெங்காயம், பூண்டு இல்லாமல் சமையல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இச்சண்டை முற்றிய நிலையில் ஒரே வீட்டில் இரண்டு வகையான சமையல் செய்யப்பட்டது. அப்படியும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து கேசவ் மனைவி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டிற்குஸ்ஹ் சென்றுவிட்டார்.

2013ம் ஆண்டு கேசவ் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் சமையலில் வெங்காயம், பூண்டு போடாமல் உணவு தயாரிப்பதாகவும், வீட்டில் இருந்து சென்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார், அவர்.
அதோடு அடிக்கடி மத பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதோடு மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். விரும்பி வீட்டை விட்டுச் சென்ற மனைவிக்கு பராமரிப்பு கொடுக்க உத்தரவிட்டதை எதிர்த்து கேசவ் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனைவி தரப்பில்... விவாகரத்தை எதிர்த்தும், பராமரிப்பு தொகையைக் கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கேசவ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் மனைவிக்குப் பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உணவு பழக்கம்தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணம் என்று வாதிட்டார். கேசவ் மனைவி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், விவாகரத்துக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பராமரிப்பு தொகையை கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை கேசவ் ஏற்றுக்கொண்டார். பராமரிப்பு தொகையை செலுத்திவிடுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



















