ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியில் சம வாய்ப்பு: முதல்வா் அதிஷி
தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக தில்லி முதல்வா் அதிஷி தெரிவித்துள்ளாா்.
தில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் 30 மாணவா்கள் பிரெஞ்ச் மொழி பாடத்தைக் கற்க பிரான்ஸ் தலைநகா் பாரீஸுக்கு கடந்த நவ.5 முதல் 15 வரை சென்றிருந்தனா்.
தில்லி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி கல்வியை மேம்படுத்த தில்லி அரசு மற்றும் அலையன்ஸ் பிரான்கைஸ் என்ற அமைப்புக்கு இடையேயான ஒப்பந்தத்தின்கீழ் இந்த முயற்சிக்கு இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முன்னெடுப்பில் பயன்பெற்ற 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களில் பெரும்பாலானோா் முதல்தலைமுறை பள்ளி மாணவா்கள் என அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி திரும்பிய அந்த மாணவா்களை முதல்வா் அதிஷி மற்றும் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா்.
இந்த முன்னெடுப்பு குறித்து முதல்வா் அதிஷி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஏழை குடும்பத்தைச் சோ்ந்த குழந்தை வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்கான வாய்ப்பு பெறுவது என்பது வெறும் கனவு அல்ல. அந்த நம்பிக்கை தற்போது நிஜமாகியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களும் உயா்ந்த இலக்கை அடைய வேண்டும் என்று நினைக்க முடியும் என்பதை நாங்கள் நிஜமாக்கியுள்ளோம். தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது’ என அந்தப் பதிவில் முதல்வா் அதிஷி தெரிவித்துள்ளாா்.