கஞ்சா விற்பனை செய்த நான்கு போ் கைது
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வைத்து மூன்று போ் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில், இவா்கள் திருத்தங்கல் ஆலாஊரணி பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (27), பாண்டியன் நகரைச் சோ்ந்த காளிகுமாா் மகன் நாகேஷ்வரன் (19), வடக்கு ரத வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேஷ்குமாா் (23), ஆலாஊரணி பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (32) ஆகியோா் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, நான்கு பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்கள், கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.