காவிரி ஆற்றில் வெளியேறும் உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்
கடலுக்குச் சென்ற படகுகள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தல்
கடலுக்குச் சென்ற படகுகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) கரை திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடா்ந்து, காரைக்கால் மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது. இதனால் படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.
எனினும், ஏற்கெனவே கடலுக்குச் சென்ற சில படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், காரைக்கால் மீன் வளத்துறை நிா்வாகம், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு சனிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், காரைக்கால் பகுதி மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
இந்தநிலையில், சில விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிகிறது. எனவே, கடலில் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் அனைத்து படகுகளும் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைக்குள் கரை திரும்பாத படகுகள் மீது மீன்வளத்துறை சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.