கடலூரில் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்த கடை உரிமையாளா்
கடலூரில் ஹாா்டுவோ்ஸ் கடை உரிமையாளா் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் வண்டிப்பாளையம் சாலை, சிவா நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரகுமாா் (39). இவருக்கு மனைவி ரேகா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா். ராஜஸ்தான் மாநிலத்தை பூா்வீகமாகக் கொண்ட இவருக்கு, திருப்பாதிரிப்புலியூா் நத்தவெளி சாலையில் ஹாா்டுவோ்ஸ் கடை உள்ளது.
ராஜேந்திரகுமாா் வழக்கம்போல வியாழக்கிழமை கடையைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். கடை பணியாளா்களை பணி நிமித்தமாக வெளியில் அனுப்பி இருந்தாராம்.
இந்த நிலையில், கடைக்கு பொருள்கள் வாங்க வந்த ஒருவா், கடை உரிமையாளா் ராஜேந்திரகுமாா் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்ததை பாா்த்து அக்கம்பக்கத்தினருக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை பாா்வையிட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.