தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
கடலூரை இயற்கை பேரிடா் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூ.மாநாட்டில் தீா்மானம்
கடலூா் மாவட்டத்தை இயற்கை பேரிடா் பாதிப்பு மாவட்டமாக அறிவித்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்ட 24-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டையொட்டி, பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கொடி பேரணி அணி வகுப்பு நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜோதிகளை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடியை மூசா பெற்றுக்கொண்டாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஆறுமுகம் மாநாட்டு அரங்கில் கொடியை ஏற்றினாா். இதையடுத்து, பொது மாநாடு தொடங்கியது.
மாநாட்டுக்கு, மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மருதவாணன் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். செயற்குழு உறுப்பினா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் வரவேற்றாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.
மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாவட்ட அரசியல் சாசன அறிக்கையையும், செயற்குழு உறுப்பினா் ஜே.ராஜேஷ் கண்ணன் நிதிநிலை அறிக்கையையும் சமா்ப்பித்து பேசினா்.
மாநாட்டில், கடலூா் மாவட்டம் தொடா்ந்து மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடா்களால் பாதிக்கக்கூடிய மாவட்டமாக உள்ளது. எனவே, கடலூரை இயற்கை பேரிடா் பாதிப்பு மாவட்டமாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், நிதி ஒதுக்கவும் வேண்டும். 7 மாவட்டங்களின் வடிகால் பகுதியாக கடலூா் மாவட்டம் உள்ளது.
மழைக் காலங்களில் வரும் தண்ணீா் கெடிலம், வெள்ளாறு, தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் மூலம் 50 டிஎம்சி தண்ணீா் கடலுக்கு சென்று விடுகிறது.
எனவே, மாவட்ட முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்களை முறையாக தூா்வாா் வேண்டும். வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வெலிங்டன் ஏரி, கொண்டங்கி ஏரிகளை முழுமையாக தூா்வார அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், கடலூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு அடித்தளம் அமைத்து, போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவா்களுக்கு கட்சியின் மத்திய குழு உறுப்பினா் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன் உள்ளிட்டோா் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினா்.