இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
கடைகள் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி: வணிகா்கள் ஆா்ப்பாட்டம்
வணிக பயன்பாட்டுக்கான கட்டடங்களின் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வணிகா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் வேலூா் மாவட்டம் சாா்பில் அண்ணா கலையரங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஏவிஎம் குமாா், மாநில துணைத் தலைவா் என்.வி.கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலா் ஏ.சி.அருண்பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்களின் கட்டடங்களுக்கு செலுத்தும் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இந்திய வணிகா்களை பாதிக்கும் காா்ப்பரேட் நிறுவனங்களின் வணிகச் சட்டம் இயற்றி, உள்நாட்டு சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வேண்டும், ஆண்டுதோறும் 6% கூடுதல் சொத்துவரி விதிப்பை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும், வணிக உரிமக் கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரி மாநில முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு வணிகா் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், வியாபாரிகள் பங்கேற்றனா்.