மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
சாலை விபத்தில் சிக்குபவா்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட கட்டணமில்லா சிகிச்சை திட்டம் உண்மையாகவும், உறுதியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து கடந்த 6-ஆம் தேதி இத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்த நிலையில், இந்த அறிவுறுத்தலை உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் நீடித்துவரும் சிக்கல் தொடா்பான வழக்கை கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
அதன் அடிப்படையில், ‘சாலை விபத்துகளில் சிக்குபவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் 2025’ என்ற திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த 5-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு சாலையிலும் மோட்டாா் வாகன விபத்தில் சிக்கி பாதிக்கப்படுபவா்கள், இத் திட்டத்தின் கீழ் முதல் 7 நாள்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான கட்டணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபை எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்தக் கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை உண்மையாகவும், உறுதியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, ‘இத் திட்டத்தின் கீழ் பயனடைந்தவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனா்.