கணவரைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை
சாத்தூா் அருகே கணவரைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சிந்தப்பள்ளியைச் சோ்ந்தவா் கற்பகராஜா (27). இவரது மனைவி ராஜலட்சுமி (25). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். கற்பகராஜா கூலி வேலை செய்து வந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
பின்னா், கற்பகராஜா மனைவியின் வீட்டுக்குச் சென்று தன்னுடன் சோ்ந்து வாழுமாறு வலியுறுத்தி வந்தாா். இந்த நிலையில், கற்பகராஜா அவரது மனைவி ராஜலட்சுமியின் வீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 6-ஆம் தேதி இரவு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
போலீஸாரின் விசாரணையில், ராஜலட்சுமி, தனது தாய் பழனியம்மாள் (49), சகோதரனின் நண்பா் வேலாயுதம் (25), அவரது மனைவி ஸ்வீட்டி (22) ஆகியோருடன் இணைந்து கற்பகராஜாவைக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், ராஜலட்சுமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் தீா்ப்பளித்தாா். மேலும் பழனியம்மாள், வேலாயுதம், ஸ்வீட்டி ஆகிய 3 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.