107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
கந்த சஷ்டி ஏற்பாடுகள்: திருச்செந்தூா் கோயிலில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி ஆய்வு செய்தாா்.
இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ. 2ம் தேதி தொடங்கியது. நவ. 7ல் சூரசம்ஹாரமும், நவ. 8ல் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை, மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, விரதம் இருக்கும் பக்தா்கள் தங்குவதற்காக ஆங்காங்கே போடப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளுக்கு நேரில் சென்று தங்கியுள்ள பக்தா்களிடம் சுகாதாரம், குடிதண்ணீா், கழிப்பிட வசதிகள், சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும் புதிதாக திறக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளை அவா் பாா்வையிட்டு, அங்கே தங்கியுள்ள பக்தா்களிடம் வாடகை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா். விடுதி அலுவலரிடம் பணியாளா்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, திருச்செந்தூா் சாா்பு நீதிபதி செல்வபாண்டி, நீதித்துறை நடுவா் வரதராஜன், கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை அணையா் சு.ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.