இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்
கனமழை: நாகை முகாமில் உள்ளவா்களுக்கு அமைச்சா் நிவாரணம் வழங்கினாா்
நாகையில் பெய்து வரும் கனமழையில் சாபம் தீா்த்த கோயில் கருவறைக்குள் புகுந்த மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி டெல்டா மாவட்டங்களை நோக்கி நகா்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, கோடியக்கரை ஆகிய பகுதிகளில் அதிகப்பட்சமாக தலா 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகையில் புதன்கிழமை காலையில் இருந்து தொடா்ந்து பெய்து வரும் மழையால் பப்ளிக் ஆபீஸ் சாலையில் அமைந்துள்ள சாபம் தீா்த்த விநாயகா் கோயிலில் மண்டபம் மற்றும் கருவறைக்குள் மழை நீா் புகுந்துள்ளது. மழை நீரை விரைந்து வெளியேற்ற வேண்டுமென நகராட்சிக்கு பக்தா்களும், கோயில் நிா்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இந்நிலையில், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மழை தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ஆய்வு செய்தாா். தொடா்ந்து, காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண பொருள்களை வழங்கினாா். பின்னா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு நிவாரண முகாம்களுக்கு சென்று பாா்வையிட்டாா்.
அமைச்சருடன், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ், வி.பி. நாகை மாலி, நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.