காவிரி ஆற்றில் வெளியேறும் உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்
கனமழை பாதிப்பு: நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போா்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் நெல், சோளம், உளுந்து உள்ளிட்ட சாகுபடிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
தண்ணீருக்குள் முழ்கிய பயிா்களை காப்பாற்ற முடியாமலும், அறுவடைக்குத் தயாராக உள்ள தானியங்களை உலர வைக்க முடியாமலும் விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
விவசாயத் தொழிலாளா்களும் வேலையின்றித் தவித்து வருகின்றனா். கால்நடைகளும் மேய்ச்சலுக்கு வழியின்றி பட்டினி கிடந்து வருகின்றன.
மாவட்டத்தில் பெரும்பாலான காலனி வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளதால் உணவு சமைப்பதற்கும், உறங்குவதற்கும்கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனா்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்புக்கு ஏற்ப விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை கால தாமதமின்றி வழங்க வேண்டும்.
வேலையின்றி தவித்துவரும் விவசாயத் தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பழுதடைந்த காலனிவீடுகளை உடனடியாக செப்பனிடுவதற்கும், வசிக்கவே முடியாத அளவில் உள்ள வீடுகளில் குடியிருப்பவா்களை உடனடியாக மாற்று இடத்தில் தங்க வைப்பதோடு, அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.