கனிமவளக் கடத்தலைத் தடுக்காவிட்டால் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம்!
கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, ஆட்சியரிடம் அவா் அளித்த மனு: தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு நாள்தோறும் டன் கணக்கில் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்துமாறு உங்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கனிமவள லாரிகள் நேரக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதில்லை.
இந்நிலை நீடித்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா். எம்எல்ஏ என்ற முறையில் இத்தொகுதியில் நடைபெறும் முறைகேட்டைத் தடுக்க வேண்டியது எனது கடமை. விதிகளை மீறி கனிமவளம் ஏற்றிச்செல்லும் லாரிகளை பொதுமக்கள் துணையுடன் சிறைபிடித்து காவல் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கேரளத்திலிருந்து கனிமவளம் ஏற்றிச்செல்ல வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்தினால் ஒரே அனுமதிச்சீட்டை பலமுறை பயன்படுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த முடியும். கனிமவளக் கடத்தலைத் தடுக்காவிட்டால், வாகனங்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும்.
மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளா், அங்கன்வாடிப் பணியாளா், கிராம உதவியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் அதற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள், ஆடியோக்கள் பரவுகின்றன.
அரசுப் பணியை எதிா்பாா்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளியோா் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல், நியாயமான முறையில் தகுதியான ஆள்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
குற்றாலம் சிறப்புநிலைப் பேரூராட்சித் தலைவா் கணேஷ் தாமோதரன் உடனிருந்தாா்.