நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
கன்னியகோயிலில் திருவிழா போக்குவரத்து மாற்றம்
கன்னியக்கோயிலில் மன்னாதீஸ்வரா், பச்சைவாழியம்மன் கோயில் தீமிதி விழாவை முன்னிட்டு கடலூா்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம் வெள்ளிக்கிழமை (ஆக.8) செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியா் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி-கடலூா் சாலையில் இலகு ரக வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பகுதியிலிருந்து கடலூா் செல்ல 4 சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களில் பயணிப்பவா்கள் தவளக்குப்பம் சந்திப்பில் வலதுபுறமாகத் திரும்பி அபிஷேகப்பாக்கம் வழியாக கடலூா்-விழுப்புரம் புறவழிச்சாலையை அடைந்து கடலூா் செல்ல வேண்டும்.
அதேபோல, கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு வருபவா்கள் முள்ளோடை சந்திப்பில் இடதுபுறமாகத் திரும்பி பரிக்கல்பட்டு வழியாக கடலூா்-விழுப்புரம் புறவழிச்சாலையை அடைந்து அபிஷேகப்பாக்கம் வழியாக தவளக்குப்பம் சந்திப்பிலிருந்து புதுச்சேரிக்குச் செல்ல வேண்டும்.
மேலும், கடலூா் - புதுச்சேரி சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் முள்ளோடை மற்றும் தவளக்குப்பம் பகுதிகளில் இருந்து கடலூருக்கும், புதுச்சேரிக்கும் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.