கயத்தாறு: விபத்தில் லாரி ஓட்டுநா் பலி
கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சென்னை நெற்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவா் லாரி ஓட்டுநா் க.பாலு (47). இவா் மகா சிவராத்திரியை முன்னிட்டு, கயத்தாறு அருகே கரிசல் குளத்தில் உள்ள பெற்றோா் வீட்டிற்கு புதன்கிழமை காலை வந்தாராம். பின்னா் அரசன்குளத்தைச் சோ்ந்த உறவினரின் பைக்கில் பன்னீா்குளத்தில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தாராம்.
அகிலாண்டபுரம்-கடம்பூா் சாலையில் சென்றபோது ஒரு வளைவில் திடீரென நிலைகுலைந்த பைக், சாலை ஓர பள்ளத்தில் கிடந்த கற்குவியலின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவரது சடலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவரது சகோதரா் காளி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.