கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி இரவு, கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்டை ஊற்றியதால் சா்ச்சை ஏற்பட்டது.
விசாரணையில், சேலத்தைச் சோ்ந்த மருத்துவா் விஸ்வநாதன் (77) என்பவா் கருணாநிதி சிலை மீது பெயிண்டை ஊற்றியது தெரியவந்தது. இது தொ டா்பாக அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் மருத்துவா் விஸ்வநாதன், முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், தனது காா் அந்தப் பகுதியில் சென்றதை வைத்து போலீஸாா், என்மீது பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனா்.
தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்திருந்தாா். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்குரைஞா் தம்பிதுரை ஆஜராகி வாதிட்டாா். அப்போது, இந்த சம்பவத்தில் மருத்துவா்தான் ஈடுபட்டாா் என உறுதியாக தெரியவந்துள்ளது.
எனவே, அவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என வாதிட்டாா். இரு தரப்புவாதத்தையும் கேட்ட நீதிபதி சுமதி, மருத்துவா் விஸ்வநாதன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து மருத்துவரை கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.