மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
கரோனா கால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லும்?அனைத்துத் துறை செயலா்களுக்கு தலைமைச் செயலா் கடிதம்
கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட நேரடி நியமனப் பதவிகள் எதுவரை செல்லுபடியாகும் என்பதற்கான விளக்கக் கடிதத்தை அனைத்துத் துறை செயலா்களுக்கும் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் அனுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் அனுப்பிய கடிதத்தின் விவரம்:
கரோனா பெருந்தொற்று காரணமாக, பணியாளா் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, நேரடி நியமனம் மூலம் பணியாளா்கள் நியமிக்கப்பட்டதுடன், அவா்களுக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் கூடுதலாக உயா்த்தப்பட்டது. இதற்கான உத்தரவில் தொடா்புடைய பணி விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு, தலைமைச் செயலக அனைத்துத் துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
அதைத் தொடா்ந்து, ஒரு சில தலைமைச் செயலகத் துறைகள் அரசாணையில் வெளியிடப்பட்ட 2 ஆண்டுகள் வயது உச்சவரம்பு சலுகையானது இப்போதும் நீட்டிக்கப்படுகிா என்பது குறித்து விளக்கங்களைக் கோரின. அதன்படி உரிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
கரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக போட்டித் தோ்வுகள் தாமதமானதால் அறிவிக்கப்பட்ட நேரடி பணி நியமனப் பதவிகளின் சலுகைக் காலம் 2026 செப்.12-ஆம் தேதியாகும்.
எனவே, அதுவரையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பணியாளா் தெரிவு முகமைகள் மற்றும் நியமன அலுவலா்கள் ஆகியோா் அறிவிக்கைகள் மூலம் பணியாளா்களை தோ்வு செய்து கொள்ளலாம்.
அடுத்த ஆண்டு செப்.12-ஆம் தேதி வரை பணிநியமனங்களை பாதுகாக்கும் வகையில், அந்தந்த பணி விதிகளில் உரிய திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலக அனைத்துத் துறைகளும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.