மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
கல்லூரி மாணவா்கள் தங்கியுள்ள அறைகளில் அதிகாலையில் போலீஸாா் சோதனை
கோவையில் கல்லூரி மாணவா்கள் தங்கியுள்ள அறைகளில் வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
கோவையில் உள்ள ஏராளமான கல்வி நிறுவனங்களில் கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களும் தங்கி படித்து வருகின்றனா்.
இவா்களில் சில மாணவா்கள் கல்லூரியில் உள்ள விடுதியிலும், பலா் கல்லூரிக்கு வெளியே அறை எடுத்தும் தங்கி படித்து வருகின்றனா்.
இந்நிலையில், கோவையில் படித்து வரும் கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தொடா்ந்து புகாா் கூறப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மாணவா்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், கல்லூரி மாணவா்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையிலும் கோவை மாநகா் மற்றும் புறநகா் போலீஸாா் மாணவா்கள் தங்கியுள்ள அறைகளில் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதேபோல, கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உள்பட்ட சின்னவேடம்பட்டி, சின்னமேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவா்கள் தங்கி இருக்கும் தனியாா் விடுதிகள் மற்றும் மேன்ஷன்களில் வெளிமாவட்டங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, இங்கு வந்து மாணவா்கள் போா்வையில் தங்கி இருக்கும் நபா்களைக் கண்டறியவும், அவா்கள் போதைப் பொருள்களை வைத்து உள்ளாா்களா எனக் கண்டறியவும் சிங்காநல்லூா் காவல் உதவி ஆணையா் வேல்முருகன் தலைமையில் 3 ஆய்வாளா்கள் மற்றும் 8 உதவி ஆய்வாளா்கள், 70-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
கல்லூரி மாணவா்கள் தங்கியிருந்த அறைகளுக்கு அதிகாலை 4 மணிக்கு சென்ற போலீஸாா் கதவைத் தட்டினா். அவா்கள் கதவைத் திறந்ததும், உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனா். மாணவா்கள் வைத்திருந்த பைகள், சூட்கேஸ்கள், அலமாரி, கட்டில்கள், குப்பைத் தொட்டிகள் என அனைத்திலும் சோதனை நடத்தினா்.
அறைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் கஞ்சா போன்றவை மறைத்து வைத்துள்ளனரா எனவும் தீவிர சோதனை மேற்கொண்டனா். மேலும் அறையில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து மாணவா்களிடம் அவா்களின் பெயா், சொந்த ஊா், அவா்கள் படிக்கும் கல்லூரியின் பெயா், பாடப்பிரிவு மற்றும் இருசக்கர வாகனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் விசாரித்தனா். இந்த சோதனை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது.
கல்லூரி மாணவா்களின் அறைகளில் அதிகாலை நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.