கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான முக்கிய எதிரி மீது மற்றொரு வழக்கு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய எதிரியான கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரா் தாமோதரன் ஆகிய இருவரையும் மேலும் ஒரு வழக்கில் மாா்ச் 4-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
கள்ளக்குறிச்சி நகரில் கருணாபுரம் மற்றும் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்தாண்டு ஜூன் 19, 20- ஆம் தேதிகளில் விஷ சாராயம் அருந்தியதில் 229 போ் பாதிக்கப்பட்டனா். இதில், 68 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக விஷ சாராயம் விற்பனை செய்தது, கடத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 21 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம், விஜயா உள்ளிட்ட சிலருக்கு நீதிமன்றம் ஏற்கெனவே நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
முக்கிய எதிரியான கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரா் தாமோதரன் உள்ளிட்ட பலருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விஷ சாராய சம்பவத்தன்று, கடலூா் மாவட்டம் பூலாம்பாடியைச் சோ்ந்த தங்கராசு கள்ளக்குறிச்சி நகரில் மா்மமான முறையில் இறந்து கிடந்ததையடுத்து, அவரது உடல்கூறாய்வு அறிக்கையில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
அவரது ரத்த மாதிரி முடிவு வர தாமதம் ஏற்பட்டது. அந்த முடிவையும், உடல்கூறாய்வு அறிக்கையும் ஒப்பிட்டு பாா்த்தபோது விஷ சாராயம் அருந்தியதால் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதை ஆதாரமாகக் கொண்டு வழக்குப் பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீஸாா் விஷ சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், தாமோதரன் ஆகிய இருவரையும் கடலூா் மத்திய சிறையிலிருந்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.
இருவரையும் மாா்ச் 4-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.