கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!
கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரில் யோர்க்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக யோர்க்ஷைர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத் கூறியதாவது: துரதிருஷ்டவசமாக, தனிப்பட்ட காரணங்களினால் யோர்க்ஷைர் அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. வருகிற ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும் போட்டி மற்றும் இந்த தொடரின் மீதமுள்ள போட்டிகளிலும் அவர் இடம்பெறமாட்டார். அவர் அணியில் விளையாட முடியாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அவருக்கு மாற்று வீரரை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், நேரம் மிகவும் குறைவாக இருப்பது அழுத்தத்தைக் கொடுக்கிறது. இதற்கு மேல் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். முழங்கை காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் நடுவிலேயே விலகியது குறிப்பிடத்தக்கது.
Rudraj Gaikwad has withdrawn from the County Championship series due to personal reasons.
இதையும் படிக்க: ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்