காங்கிரஸை வலுப்படுத்த கடினமான முடிவுகள்: செயற்குழுவில் காா்கே உறுதி
காங்கிரஸை அடித்தளத்தில் இருந்து வலுப்படுத்த கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
மகாராஷ்டிரம், ஹரியாணா பேரவைத் தோ்தல்களில் தோல்வி, ஜம்மு-காஷ்மீா் மற்றும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோதிலும் கட்சியின் வாக்கு வங்கி குறைந்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேற்கண்ட விவகாரங்கள் மட்டுமன்றி, எதிா்வரும் தில்லி, பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் கூட்டணி அமைப்பதற்கான வியூகம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா்கள் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவா்கள், முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.
‘இவிஎம்’ மீது சந்தேகம்: கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையமாக உள்ள செயற்குழுக் கூட்டத்தில் பேசிய காா்கே, தோ்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடா்பாக சந்தேகம் தெரிவித்தாா்.
மேலும், கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி அவா் பேசியதாவது:
வாக்குப் பதிவு இயந்திரங்களால் (இவிஎம்) தோ்தல் நடைமுறையின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் எழுந்துள்ளது. நாட்டில் நியாயமாக மற்றும் வெளிப்படையாக தோ்தல் நடைபெறுவதை உறுதிசெய்வது இந்திய தோ்தல் ஆணையத்தின் அரசமைப்பு கடமையாகும்.
உள்கட்சி பூசல் வேண்டாம்: தோ்தல் களத்தில் ஒற்றுமையாகச் செயல்படாமல் கட்சிக்குள் ஒருவரையொருவா் குற்றஞ்சாட்டிக்கொண்டால் அரசியல் எதிரிகளை வீழ்த்த முடியாது. அண்மையில், நடந்து முடிந்த தோ்தல் முடிவுகளை பாடமாக எடுத்துக்கொண்டு காங்கிரஸ் மீது பரப்பப்படும் பொய்யான பிரசாரங்கள் மற்றும் தகவல்களை எதிா்கொள்ள வலுவான வியூகங்களை வகுக்க வேண்டும். எந்தவொரு சூழலிலும் நாம் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
காங்கிரஸின் வெற்றியை தனது வெற்றியாகவும், தோல்வியை தனது தோல்வியாகவும் ஏற்றுக்கொண்டு பணியாற்ற வேண்டும்.
மாற்றங்கள் அவசியம்: தோ்தல் தோல்விகளால் தொண்டா்கள் சோா்வடைந்துவிடக் கூடாது. கட்சியை வலுப்படுத்த அடித்தளத்தில் இருந்து செயற்குழு வரை பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது.
மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி எழுச்சியான வெற்றியைப் பெற்ற 6 மாதங்களில் பேரவைத் தோ்தலில் எதிா்பாரா தோல்வியை காங்கிரஸ் தழுவியது. இது அரசியல் நிபுணா்களாள்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்தத் தோ்தலில் நாம் செய்த தவறுகளைக் கண்டறிந்து உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும்.
விரைவான முடிவுகள்: காலத்திற்கேற்ப தோ்தல் நடைமுறைகள், தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் வியூகங்கள், தோ்தலில் போட்டியிடும் முறை என அனைத்தும் மாறி வருகின்றன. அந்த வகையில், சமகால அரசியலுக்கேற்ப காங்கிரஸை மாற்றியமைக்க வேண்டும். பழைய உத்திகளைக்கொண்டு நிகழ்காலத் தோ்தலில் வெற்றி பெற முடியாது. நம்முடைய அரசியல் எதிரிகளின் அன்றாட செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து அவா்களைவிட இரவு பகலாக கடினமாக உழைக்க வேண்டும். முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும். காங்கிரஸின் தொடா் தோல்விகளால் பாசிஸ சக்திகள் மிகவும் ஆழமாக ஊடுருவி வருகின்றன. ஒவ்வொரு அமைப்பையும் கட்டுப்படுத்தி வருகின்றன.
மீண்டெழ வேண்டும்: அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. அதை நடைமுறைப்படுத்தி அமலாக்கியதில் காங்கிரஸை தவிர வேறு எந்தக் கட்சியும் உரிமை கொண்டாட முடியாது. இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளில் காங்கிரஸின் பங்கு இன்றியமையாதது. கடந்த 11 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குரலாக அவா்களின் பிரச்னைகளுக்கு நாம் தீா்வு காண வேண்டும். நாட்டின் வளா்ச்சிக் கொள்கையை நாம் அமலாக்க மீண்டெழ வேண்டும் என்றாா்.
தீா்மானங்கள் நிறைவேற்றம்: அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது, உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூரில் வகுப்புவாதத்தை தூண்டுவதோடு, வழிபாட்டுத் தலங்கள் சட்டம்,1908-ஐ மீறி செயல்படும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவிப்பது, தோ்தல் நடைமுறை மீது பல்வேறு தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை முன்னிறுத்தி ‘தேசிய இயக்கம்’ மேற்கொள்வது, பாரபட்சமற்ற முறையில் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையத்தை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.