காங்கிரஸ் அலுவலகங்களைச் சூறையாடிய பாஜகவினர்!
மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவின் இளைஞர் அணியினர் சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பையில் வியாழக்கிழமை (டிச. 19) காங்கிரஸுக்கு எதிரான முழக்கத்தோடு அலுவலகத்திற்குள் நுழைந்த பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பு, அலுவலகத்தின் தளவாடங்களைச் சேதப்படுத்தி, காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களைக் கிழித்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது, மும்பை, கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவினர் சூறையாடிய சம்பவம், ஒரு திட்டமிடப்பட்ட சதியே’’ என்று கூறினார்.
தொடர்ந்து, மகாராஷ்டிரத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான விஜய் வதேத்திவார் கூறியதாவது, அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சிதான் இது. இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் அலுவலகத்தின் அருகே காவல் ஆணையர் அலுவலகமும் இருப்பதால், எப்போதும் அந்தப் பகுதியில் காவல்துறையினர் இருந்துகொண்டே இருப்பார்கள். இது நடக்கப் போகிறது என்ற தகவல் அவர்களுக்கு தெரியாதா? காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள்கள் விவாதத்தின் முடிவில், கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 17) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானது.
இதனைக் கண்டித்து, அம்பேத்கருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை பாஜக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.