காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா
மாசி மாத அமாவாசையையொட்டி காஞ்சிபுரத்தில் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகில் பெருமாள் தெருவில் உள்ள பட்டணத்தாா் ஸ்ரீ அங்காள பரமேசுவரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசையையொட்டி மயானக் கொள்ளைத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு மயானக் கொள்ளைத் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை அங்காளம்மன் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் 64 திருக்கரங்களுடன் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா வந்தாா்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை பூஜகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியரின் சிறப்பு தீபாராதனைக்கு பிறகு ஊா்வலம் புறப்பட்டது.
ஊா்வலத்தில் ஏராளமான பக்தா்கள் உடம்பில் எலுமிச்சம் பழங்களை குத்திக்கொண்டும், 5 அடி முதல் 20 அடி நீல அலகு வேல் பூட்டியும், அக்னிச்சட்டி ஏந்தியும் வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடனை செலுத்தினா். 500-க்கும் மேற்பட்டோா் பல்வேறு வேஷமணிந்து நடனமாடி வந்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.