'அம்மன் கண், மரம், தங்கம், கரியர்' - சமந்தா வெட்டிங் சாரி சீக்ரெட்ஸ்
காஞ்சிபுரம்: மாமியாரைக் கொலைசெய்த மருமகன் - உயிருக்குப் போராடும் மனைவி; என்ன நடந்தது?
காஞ்சிபுரம், அருந்ததி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் மனைவி சந்தவள்ளி (54). சந்தவள்ளியின் அம்மா திலகா (70). இவர்கள் மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கூலி வேலை செய்யும் லட்சுமணன் போதைக்கு அடிமையானவர். அதனால் வீட்டுக்கு சரிவர வருவதில்லை. இவர் வீட்டுக்கு வந்தாலே மனைவி, மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று லட்சுமணன், போதையில் வீட்டுக்கு வந்திருந்தார். மனைவி சந்தவள்ளியுடன் லட்சுமணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், சுத்தியலை எடுத்து மனைவி சந்தவள்ளியை தாக்கினார். அதை மாமியார் திலகா தடுத்தார். சுத்தியலால் மனைவி, மாமியாரை லட்சுமணன் தாக்கியதில் சந்தவள்ளி, திலகா ஆகியோர் மயக்கமடைந்தனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்ததும் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். மயங்கி கிடந்த திலகா, சந்தவள்ளியை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திலகா உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தவள்ளி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார், திலகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் மாமியாரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மருமகன் லட்சுமணனை போலீஸார் தேடிவருகிறார்கள்.



















