கிணறு விமர்சனம்: யதார்த்தமான எழுத்து, ஆனா மேக்கிங்? பாதி கிணற்றை மட்டுமே தாண்டும...
காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்?
1950களில், தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநராக இருந்து சரிந்து போன ஐயா (சமுத்திரக்கனி), தன் கனவுப் படமான 'சாந்தா' படத்தை, உச்ச நடிகரும் அவரின் சிஷ்யருமான டி.கே. மகாதேவனை (துல்கர் சல்மான்) வைத்து இயக்குகிறார். இருவருக்கும் உள்ள அகங்கார மோதலால், அப்படம் பாதியிலேயே நின்றுபோகிறது.
இந்நிலையில், பெரும் நஷ்டத்தில் இயங்கும் மாடர்ன் தியேட்டர்ஸின் உரிமையாளர் மார்ட்டின் (ரவீந்திரா விஜய்), அப்படத்தை மீண்டும் தொடர முயற்சி செய்து, அதற்கு ஐயாவையும், மகாதேவனையும் சம்மதிக்க வைக்கிறார்.

மகாதேவனின் சினிமா வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர, அப்படத்திற்குப் புதுமுக கதாநாயகியாக குமாரியை (பாக்யஸ்ரீ) அறிமுகம் செய்து, அகங்காரப் பகடையாடுகிறார் ஐயா.
இந்த அகங்கார மோதலின் பின்னணி என்ன, இறுதியில் 'சாந்தா' படம் நிறைவடைந்ததா, ஐயா - மகாதேவன் பகடையாட்டம் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'காந்தா'.
50-களின் கதாநாயகனுக்கான தனித்துவமான சிகை, உடல்மொழி, நாயக மிடுக்கு என வலம் வந்து, டி.கே. மகாதேவன் கதாபாத்திரத்தை அட்டகாசமாகக் கையாண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
காதல், கோபம், ஆக்ரோஷம், வஞ்சகம், அகங்காரம் என அக்கதாபாத்திரத்தின் தனிப்பட்ட வாழ்க்கை பரிணாமங்களையும் தன் நேர்த்தியான நடிப்பால் ஆழமாக்கி, 'நடிப்பு சக்கரவர்த்தி' என்ற அக்கதாபாத்திரத்தின் அடைமொழிக்கு ரத்தமும் சதையுமாக நியாயம் செய்திருக்கிறார் துல்கர்!
படத்தின் மற்றொரு துருவமாக, பெரிய அலட்டல் இல்லாத உடல்மொழியில் வந்து, எமோஷன் காட்சிகளில் தன் அடர்த்தியான பங்களிப்பால் சமர் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. ஆங்காங்கே வரும் நையாண்டி வசனங்களில் கனியின் ட்ரேட் மார்க் டச் நச்!

அக்கால கதாநாயகிக்கான தோற்றத்தோடு, குரு மீதான மரியாதை, காதலன் மீதான மோகம், அப்பாவித்தனமான அணுகுமுறை, வெல்ல வேண்டும் என்ற வெறி என்பதாக கனமாகி கொண்டே போகும் கதாபாத்திரத்தைச் சிரமமில்லாமல் தாங்கிக் கவனிக்க வைக்கிறார் பாக்யஸ்ரீ.
ராணா டகுபதியின் கலகலப்பும் ஆக்ரோஷமும் நிறைந்த நடிப்பு, சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், பல இடங்களில் ஓவர் டோஸாக மாறி தொந்தரவு செய்கிறது.
படம் முழுவதும் ஒரே மாதிரியான பதற்ற உடல்மொழியிலேயே வந்தாலும், சின்ன சின்ன முகபாவனைகளால் கச்சிதமான பங்களிப்பைத் தந்து, மனதில் நிற்கிறார் பிரிஜேஷ் நாகேஷ். ரவீந்திரா விஜய், நிழல்கள் ரவி, காயத்ரி, பகவதி பெருமாள், வையாபுரி ஆகியோர் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் ஒரே செட், ஆங்காங்கே வரும் கறுப்பு-வெள்ளை காட்சிகள், நவீன சினிமாவிற்குள் வரும் 50களின் சினிமா, அவற்றுக்கான பிரத்யேக ஒலியமைப்பு, அக்கால மெட்ராஸ், கதாபாத்திரங்களின் அகத்தைப் பேசும் ஃப்ரேம்கள் என ஃப்ரேமிற்குப் ஃப்ரேம் பெரும் உழைப்பைக் கொட்டி, படத்தின் முதுகெலும்பாக நிற்கிறார் ஒளிப்பதிவாளர் டானி சான்செஸ்-லோபஸ்.
இவருக்கு வரைகலை குழுவின் துல்லியமும் கைகொடுத்திருக்கிறது. சினிமாவிற்குள் சினிமா, முன்னும் பின்னும் நகரும் முதற்பாதி என வடிவ ரீதியாக ரசிக்க வைப்பதோடு, எமோஷன் பாதையிலும் தடையில்லாமல் பயணிக்க வைக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி.

50களின் சினிமா செட்டிலுள்ள சின்ன சின்ன சினிமா உபகரணங்கள், கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் பொருட்கள் என நுணுக்கமான உழைப்பு படம் நெடுக மிளிர்கிறது. ஸ்டூடியோக்கள், அக்கால மெட்ராஸ் கட்டடங்கள், போஸ்டர் டிசைன்கள் என வெளிப்புறத்திலும் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் பங்களிப்பு அட்டகாசம் செய்திருக்கிறது.
ஜானு சந்தர் இசையில், 'கண்மணி நீ' பாடல் உருக வைக்கிறது. இந்த எமோஷனல் ரோலர் கோஸ்டர் பயணத்திற்குத் தேவையான பின்னணி இசையை வழங்கியதோடு, கதாபாத்திரங்களையும் மெருகேற்றியிருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். ஒப்பனை - ஆடை வடிவமைப்பு கூட்டணியின் உழைப்பு, எதார்த்தத்தைக் கூட்டியிருக்கிறது.
முன்கதையையும் பின்கதையையும் முன்னும் பின்னும் சுவாரஸ்யமாகப் பேசி, ரசிக்க வைக்கிறது செல்வமணி செல்வராஜ் - தமிழ் பிரபாவின் எழுத்துக் கூட்டணி. அக்கால சினிமாவிற்கு ஏற்ற வசனங்கள், கதாபாத்திரங்களை விளக்க உதவும் வசனங்கள் போன்றவை, கச்சிதமான எழுத்திற்கு உதாரணம்.
இருவரும் செட்டிலேயே மோதிக்கொள்வதை மேம்போக்காகச் சித்தரிக்காமல், அவற்றினூடாக இருவரின் கறுப்பு - வெள்ளைப் பக்கத்தையும் ஆழமாக விவரிக்கின்றன காட்சிகள். இருவரில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற கேள்வியை இறுதிக்காட்சி வரை கொண்டு செல்கிறது படம்.

இந்த இரு கதாபாத்திரங்களுக்கு இடையிலான இந்த சறுக்கு மர விளையாட்டு சிறிது ரிப்பீட் அடித்து தொந்தரவு செய்தாலும், அக்காட்சிகளை முடிக்கும் விதத்தில் அப்பிரச்னை கலைகிறது.
இரு பெரும் கதாபாத்திரங்களுக்கு இணையாக பாக்யஸ்ரீ கதாபாத்திரம் சரியான திரை நேரத்தோடு வந்து, அதனூடாக திரைக்கதையை நகர்த்திய விதமும் சுவாரஸ்யம்! அட்டகாசமான இடைவேளை, இரண்டாம் பாதிக்கு எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது.
ஆனால், இரண்டாம் பாதி முழுவதுமாக, முதற்பாதியின் பாதையிலிருந்து விலகிச் செல்லத் தொடங்குகிறது.
ராணாவின் வருகை, அவரின் சின்ன சின்ன மேனரிஸம், மர்மத்தை விவரிக்கும் காட்சிகள், எல்லா துணைக் கதாபாத்திரங்களும் மையக்கதையைத் தொட்டுச் செல்லும் விதம் போன்றவை தொடக்கத்தில் சுவாரஸ்யம் தந்து, ரசிக்க வைத்தாலும், அதே சுழலுக்குள் திரைக்கதை சிக்கிக்கொள்கிறது.
அதனால், முதற்பாதி கட்டிவைத்த எமோஷன் சிகரம் சிறிது சிறிதாக வலுவிழந்து, மங்கத் தொடங்குகிறது. எமோஷனலாக கதாபாத்திரங்களோடு இருந்த நெருக்கம் விட்டுப் போகிறது.
பெரும் பயணத்திற்குப் பிறகு, இறுதிக்காட்சிக்கு முன் மையக்கதைக்கு வரும் திரைக்கதை, அடுக்கடுக்கான ட்விஸ்ட்கள், கதாபாத்திரங்களின் எமோஷன் யூடேர்ன்கள், உணர்வுபூர்வமான தருணங்கள் எனப் பழைய பாதையைப் பிடித்தாலும், ஏனோ பழைய உணர்வு கைகூடாமல் போகிறது.

ஐடியாக்களாக சில காட்சிகள் கவனிக்க வைத்தாலும், அவை முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவற, பிரதான கதாபாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு அக்குறையை ஓரளவிற்கே சரி செய்கின்றன. இதனால், எமோஷன் எடைக்கல்லாக கனக்க வேண்டிய இறுதிக்காட்சி அழுத்தமில்லாமல் ஓடுகிறது.
தேர்ந்த ஆக்கத்தோடு ஓடும் படம், அட்டகாசமான நடிப்பு, சுவாரஸ்யம் சேர்க்கும் முதற்பாதி போன்றவற்றை காலி செய்யும் இரண்டாம் பாதி ஆட்டத்தால் காந்தத் தன்மையை இழக்கிறது இந்த 'காந்தா'.

















