SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்...
காந்தாரா முதல் பாகம் வரும்போதே சரியான எதிர்வினையாற்றத் தவறிவிட்டோம் - ஆய்வாளர்கள்
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வெளிவந்த காந்தாரா பாகம் -1 திரைப்படம் தனது விறுவிறுப்பான திரைக்கதையாலும், அசரடிக்கும் சினிமா மேக்கிங் தன்மையாலும் கன்னட சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வெவ்வேறு திசைகளில் பல்வேறு மனங்களால் கொண்டாடப்படும் இந்த பேன் இந்தியா திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கலைஞர்களின் அசலான உழைப்பு வெளிப்படுகிறது. ஆனால், பழங்குடி மண்ணையும் அந்த மண்ணில் நிலைத்திருக்கிற தெய்வத்தையும் மையமிட்டு எடுக்கப்பட்ட கதைக்களத்தில் பண்பாடு சார்ந்த எச்சங்களைக் கொண்டு கமர்ஷியல் கொண்டாட்டத்திற்காக பிரமிப்பாக காட்டப்பட்டிருக்கிறதே தவிர அதன் முக்கியம் உணர்ந்து, அதனால் ஏற்படும் பண்பாட்டுச் சிக்கல் உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இதைத் தொடர்ந்து இதுகுறித்து பண்பாடு, மக்கள் சார்ந்து இயங்கக் கூடிய ஆளுமைகளையுடன் உரையாடத் தொடங்கினோம்.

நாட்டாரியல் ஆய்வாளர், தொல்லியல் அறிஞர் அ.கா பெருமாள் இதுபற்றி கூறும்போது,
“ நம்முடைய பல நாட்டார் தெய்வங்கள்தான் பின்னாடி காலங்களில் செவ்வியல் தெய்வங்களாக மாறிவிடுகிறது. செவ்வியல் தெய்வங்களாக வழிபடுற பிரம்மா தவிர மற்றைய தெய்வங்கள் எல்லாமே நாட்டார் தெய்வங்கள்தாம். இந்தியாவில் புலம் பெயர்ந்த போர் வீரர்கள், வியாபாரிகள் மூலமா இராண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி வந்த தெய்வங்களும் இங்கிருந்த தெய்வங்களும் ஒன்றிணைந்துவிடுகிறது. இந்தக் கோட்பாடு இந்தியாவுடைய எல்லா இடங்களுக்கும் பொருந்தும். இன்றைக்கு நாம் வழிபடக்கூடிய பல தெய்வங்கள் எல்லாம் நாட்டார் சூழல்ல இருந்து வந்த தெய்வங்கள். தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்திற்கு பின்னர் பிராமின்களின் ஆதிக்கம் கூடுகிறது. நாயக்கர் காலத்தில் இன்னும் அதிகமாக கூடிவிடுகிறது. 200 வருசத்துக்கு முன்னாடி ‘ பண்டாரம்’ என்கிற சமூகத்தை சார்ந்தவர்கள் தான் கோயில்களில் பூஜை செய்வார்கள்.

திருமலை நாயக்கரோட படைத்தலைவன் ‘தாமு பிரியன்’ என்கிற தெலுங்கு பிராமினிடம் பிரசாதத்தை பண்டாரம் தூக்கிப் போட்டார் என்பதற்காக பண்டாரம் சமூகத்தவரை நீக்கிவிட்டு கோயில் பூசாரிகளாக பிராமின்களை தாமு பிரியன் நியமிக்கிறான். இதைப்போல் நூற்றுக்கணக்கான விஷயங்கள் மாறியிருக்கு. அது இன்றைக்கு புதிதாக நடக்கிறது இல்லை. ஆயிரம் வருசமா சோழர்களும், நாயக்கர்களும் படிப்படியாக பிராமின்களிடம் அடகு வைச்சி பின்னாடி மாறியது தான். இது காலங்காலமா நடந்துட்டு இருக்கு அதுல ஒண்ணு தான் இந்த திரைப்படம்.இதுக்குள்ள நம்ம எந்த அரசியல் கோட்பாட்டை வச்சும் பார்க்க முடியாது. நம்மை சுத்தி இருக்கிற ஒரு சூழ்நிலையினால எல்லாருமே பார்ப்பனியத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறாங்க.

அந்தச் சூழ்நிலையை உருவாக்கிறதுல இந்த மாதிரியான திரைப்படங்களுக்கும் செய்திகளுக்கும் பங்குண்டு. இதை நம்மால் சீக்கிரம் மாற்றிக்கொள்ள முடியாது. நாட்டார் வழக்காற்றியலில் மேல்நிலையாக்கம் என்கிற கோட்பாடு உண்டு. தன்னை ஒரு மேல்நிலையான ஆளாக காண்பிப்பத்தில் எல்லோருக்கும் பெருமை இருக்கு. இது சூழலின் வழியாக உருவானது. இந்தப்படமும் அப்படியான ஒன்று தான். இதை நாம் இப்படித்தான் அணுக வேண்டும் என்கிறார்.
மானுடவியலாளர், பழங்குடியின மக்களிடம் தொடர்ந்து பணியாற்றக் கூடிய முனைவர். மகேசுவரன் அவர்களிடம் இது பற்றிக் கேட்கும்போது ,
" காந்தாரா திரைப்படத்தின் முதல் பாகத்திலேயே பழங்குடிகளின் தாய்மடியாய் இருக்கக்கூடிய வனத்தில் இருக்காதன்னு சொல்லப்படுதுவதைப் போல இட்டுக்கட்டி சொல்லிருக்காங்க. பழங்குடிகளை ஆய்வு செய்கிற ஆய்வாளர்கள் அவர்களின் தாய்மடி வனம்ன்னு சொல்றோம். அதற்கு எதிரான கருத்தை இந்த மாதிரியான படத்தின் மூலமா பரப்பிட்டு வர்றாங்க. எந்த தெய்வமும் தங்களுடைய குழந்தைகளை இதை விட்டு போயிடுன்னு சொல்லாது. மக்கள் என்ன மாதிரியான கருத்தை திரிபா சொல்றாங்களா? மாற்றி சொல்றாங்களான்னு தெரியாம நம்ப ஆரம்பிச்சிருவாங்க. இந்த படம் ஒரு வகையான கருத்துத் திணிப்பு. மானுடவியலாளர்களின் வேலையே ஒரு கிரிட்டிக்கல் அனலிஸ்ட் தான். காந்தாரா முதல் பாகம் வந்த போது சரியான எதிர்வினையாற்றத் தவறியதினால் தான் அவர்களால் துணிந்து அடுத்த பாகத்தை எடுக்க முடிகிறது.

இந்தப் படம் போன்றவை சொல்லக்கூடிய கருத்துக்களை அப்படியே நம்பக்கூடிய பழங்குடியின மக்கள் இந்து சமய சாயத்தை தன் மீது பூசிக்கொள்வார்கள். தங்களுடைய பழங்குடிய சமூகத்தின் எண்ணங்கள் மழுங்கடிக்கப்பட்டு இந்து மதம் தான் நம்முடைய மதம்ன்னு அவர்களே ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு பண்பாட்டுல வாழ்ற மக்கள் அந்த பண்பாட்டுல ஏற்படுற மாற்றங்களை மெல்ல மெல்ல ஏத்துக்குவாங்க. ஆனா சமய நம்பிக்கையில்,வழிபாட்டில் உள்ள மாற்றங்களை ஏத்துக்க மாட்டாங்க. இந்தப்படத்தில் பழங்குடிகளோட அறத்தை மீறுவதாக பழங்குடிகள் என்ன பொருட்கள் சேகரிச்சாலும் சாமிக்கு ஒரு பங்கு வச்சிட்டு தனக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் தான் எடுப்பாங்க. அந்த பொருளைக்கொண்டு சந்தைப்படுத்தணும். கூடுதல் வருமானம் வரணும்ன்னு செய்ய மாட்டாங்க. இந்த மாதிரியான காட்சிகள் படத்தில் காட்டப்படும் போது பழங்குடிகளோட அறத்தை மீறுவதாக இருக்கு. ஒரு அரசு பழங்குடிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கணும். வலுக்கட்டாயமாக அவர்களை கீழே இறக்க முடியாது. அவர்கள் விரும்பும் போது கீழ வரட்டும். பழங்குடிகளிடம் தான் மூலம் தக்க வைக்கப்படுகிறது. அந்த பண்பாட்டு எச்சங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது." என்கிறார்.














