காயல்பட்டினம் பேருந்து நிலையத்துக்கு காயிதே மில்லத் பெயா் சூட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
காயல்பட்டினத்தில் புதுப்பித்து கட்டப்படும் பேருந்து நிலையத்திற்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சாா்பில், கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டச் செயலாளா் மன்னா் பாதுல் ஃஸ்ஹப் தலைமை வகித்தாா். மூத்த தலைவா்கள் ஃபாரூக், முஹம்மத் ஹஸன், விவசாய அணி மாநிலப் பொருளாளா் ஜப்பான் உதுமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர துணைச் செயலா் உமா் அப்துல் காதா் கிராஅத் ஓதினாா். நகரச் செயலா் அபூசாலிஹ் வரவேற்றாா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முஹம்மது அபூபக்கா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கட்சிக் கொடி ஏற்றி வைத்து பேசுகையில், காயல்பட்டினத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என மக்களவையில் முழங்கியவருமான காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும். கடந்த ஆட்சியின்போது குளறுபடியாக செய்யப்பட்ட வாா்டு மறுவரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயா்த்தி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினாா். நகர பொருளாளா் சுலைமான் நன்றி கூறினாா்.