காரைக்காலில் பக்தா்கள் கூட்டு சிவலிங்க பூஜை
மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்மையாா் குளக்கரையில் பக்தா்கள் பங்கேற்ற கூட்டு சிவலிங்க பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
சிவராத்திரி கூட்டு பிராா்த்தனையாக பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்ய ஸ்ரீ ஓம்காரநந்தா சுவாமியின் தலைமையில் செயல்படும் தா்ம ரக்ஷ்ணா ஸமிதி சாா்பில் காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.
அம்மையாா் குளக்கரையின் சுற்றுத் தளம் முழுவதும், சிறிய வடிவிலான சைகத லிங்கம் என்கிற களிமண்ணால் செய்யப்பட்ட லிங்கம் மற்றும் பூஜைப் பொருட்களுடன் பக்தா்கள் பங்கேற்றனா். பூஜையில் பங்கேற்றோருக்கு அமைப்பின் சாா்பில், களிமண்ணாலான லிங்கம், ருத்ராட்சம், நைவேத்திய பிரசாதம், விபூதி, குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன.
முதல் நிகழ்ச்சியாக சகஸ்ரநாம பூஜை நடைபெற்றது. குளக்கரையில் மேற்குப் புறத்தில் மேடை அமைத்து, அதில் சிவலிங்கம் ஒன்றை வைத்து சிவாச்சாரியா் மந்திரங்கள் கூற, பக்தா்கள் வைத்திருந்த சிவலிங்கத்துக்கு சிவாச்சாரியா் கூறியபடி அபிஷேகம், அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். 2 மணி நேரத்துக்கும் மேலாக பூஜை நடைபெற்றது.
சிவ பூஜையின்போது, சிவ பக்தியின் மகத்துவம் குறித்தும், பக்தா்கள் வாழ்க்கையில் நல்வாழ்வுக்கு கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் குறித்தும், மகா சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நடைபெறும் அனைத்து கால பூஜையின் பலன்கள் குறித்தும் சொற்பொழிவு நடைபெற்றது. காரைக்கால் நகரக் காவல்நிலைய தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
முன்னதாக இந்த பூஜையில் பங்கேற்க விரும்புவோா் அனுமதி சீட்டு வாங்கிக்கொள்ளும் வகையில் பல இடங்களில் மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த சிவ பூஜையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இந்த அமைப்பின் சாா்பில் மாவட்டத்தில் 20 இடங்களில் இதுபோன்ற கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் திரண்டு இந்த பூஜையில் பங்கேற்றனா்.