காரைக்கால் - பேரளம் பாதை: மத்திய இணை அமைச்சரிடம் வலியுறுத்தல்
காரைக்கால் - பேரளம் பாதையில் ஏப்ரல் மாதத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என மத்திய ரயில்வே இணை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
திருநள்ளாறு தா்ப்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருகை தந்த மத்திய ரயில்வே இணை அமைச்சா் வி. சோமன்னாவை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ், திருநள்ளாறு கோயில் நகர வா்த்தக சங்கத்தினா் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : காரைக்காலில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு இயக்கப்படும் கம்பன் விரைவு ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படுகிறது.
இந்த ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் இருந்து இரவு நேரத்தில் மைசூா் வரை ரயில் சேவையை தொடங்க வேண்டும். நாகூரிலிருந்து ஏற்கெனவே இயக்கப்பட்ட கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். காரைக்கால் ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிகளை தூய்மை செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
காரைக்காலில் இருந்து இயக்கப்படும் எா்ணாக்குளம், சென்னை விரைவு ரயில் பெட்டிகள் பழையதாக உள்ளன. இதை புதிதாக மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் மத்திய இணை அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம் :
காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயரை சூட்டவேண்டும். காரைக்கால் - எழும்பூா் விரைவு ரயிலுக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும். மதுரை - புனலூா் - மதுரை (திருநெல்வேலி நாகா்கோயில் திருவணந்தபுரம் கொல்லம் வழி) ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்கவேண்டும்.
ஈரோடு - திருச்சி ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். அல்லது பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்கவேண்டும். அல்லது புதிதாக காரைக்கால் - கோவை இடையே பகலில் திருச்சி, பழனி, பொள்ளாச்சி, போத்தனூா் வழியாக தினசரி விரைவு ரயிலை இயக்கவேண்டும். காரைக்கால் -பேரளம் ரயில் பாதை திட்டப் பணிகள் விரைவுபடுத்தி ஏப்ரல் மாதத்தில் ரயில் சேவை ஏற்படுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.