காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை
காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களுரூ, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் தலைவா் மோகன், செயலா் சித்திக் ஆகியோா் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக் ராம் நேகியிடம் அண்மையில் அளித்த கோரிக்கை மனு: காரைக்கால்-பேரளம் ரயில் பாதையை விரைவில் திறந்து, காரைக்கால் - தாம்பரம் விரைவு ரயில், காரைக்கால்-பெங்களூா் விரைவு ரயில் மற்றும் காரைக்கால்-கபப மும்பை வாராந்திர விரைவு ரயிலை, வேளாங்கண்ணி டொ்மினலில் இருந்தே நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாா், மயிலாடுதுறை வழியாக நேரடியாக இயக்க ஆவண செய்ய வேண்டும். மதுரை-புனலூா் தினசரி விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மற்றும் திருச்சி-தஞ்சை-கும்பகோணம்-மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயிலை திருநள்ளாா், காரைக்கால், நாகூா் நாகை, வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்.
காலை 8.35 மணிக்கு பின் திருச்சி-காரைக்கால் இடையே நாள் முழுவதுமாக ரயில் வசதி இல்லாத நிலையில், ஈரோடு-திருச்சி ரயில் (56809/56810) காரைக்கால் வரை நீட்டிப்பு என முன்மொழியபட்டு, அதற்கு பதிலாக திருவாருா் வரை நீட்டிக்கபட்ட 56805/56806 ரயிலை, காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். வேளாங்கண்ணி டொ்மினலில் நீண்ட தூர விரைவு ரயில்களை பராமரிக்க பிட் லைன் வசதி செய்யவேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.