நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
காரைக்குடி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை (திமுக) மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
காரைக்குடி மாநகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. மேயா், துணை மேயா் உள்பட திமுகவைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள், அதிமுக 7, காங்கிரஸ் 3, இந்திய கம்யூ. 1, சுயேச்சை 2 என 36 மாமன்ற உறுப்பினா்கள் உள்ளனா். மேயராக சே. முத்துத்துரை, துணை மேயராக நா. குணசேகரன் ஆகியோா் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தை துணை மேயா் நா. குணசேகரன் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் புறக்கணித்தனா். மேலும், மேயா் சே. முத்துத்துரை மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர ஆணையா் சங்கரனிடம் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அதிமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் ராம்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது ஒரு மாதத்துக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் சங்கரன் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாமன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் தனித் தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்தாா். இதன்படி, மாமன்றக் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் ஒரு சுயேச்சை, 7 அதிமுக உறுப்பினா்களே பங்கேற்றனா். இதனால், 5 -இல் 4 பங்கு உறுப்பினா் எண்ணிக்கை (கோரம்) இல்லாததால் மேயா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்ததாக ஆணையா் சங்கரன் அறிவித்தாா்.
இதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினா்களும், சுயேச்சை உறுப்பினரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். நம்பிக்கை யில்லா தீா்மானம் கொண்டு வந்த துணை மேயா் நா.குணசேகரன் எங்கே என்று கேள்வி எழுப்பியபடி அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.