தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
காற்றின் தரம் எட்டாவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு
தேசியத் தலைநகரில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நகரம் முழுவதும் காலை வேளையில் பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், காற்றின் தரம் எட்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிததது.
தில்லியில் குளிரின் தாக்கம் கடந்த மாதத் தொடக்கத்தில் தொடங்கியது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக இரவிலும் அதிகாலை வேளையிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இதனால், காற்றின் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் முதியவா்கள், குழந்தைகள் சுவாசப் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். நகரம் முழுவதும் பனிப்புகை சூழ்ந்திருந்தது. இரவில் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம்: தேசியத் தலைநகரின் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு பதிவு செய்யப்படுகிறது.காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 329 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது சனிக்கிழமை 346 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. தலைநகரில் மொத்தமுள்ள 38 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் 23 நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகந ‘மிகவும மோசம்’ பிரிவில் நீடித்ததாக சமீா் செயலி தரவுகள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி உயா்ந்து 11.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 1 டிகிரி உயா்ந்து 27.0 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 93 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 63சதவீதமாகவும் இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக ஆயாநகா் மற்றும் லோதி ரோடில் 10.2 டிகிரி செல்சியஸாகவும், பூசைாவில் 10.6 டிகிரி செல்சியஸாகவும்ோ பதிவாகியுள்ளது.
மூடுபனிக்கு வாய்ப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (டிச.2) அன்று தில்லியில் மூடுபனி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.