2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
கால்நடைகள் கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆட்சியா்
நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணிக்கு வருபவா்களிடம் உரிய விவரங்களை வழங்கி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் 21-ஆவது கால்நடைகள் கணக்கெடுப்புப் பணியை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது: கால்நடைகள் கணக்கெடுப்புப் பணியில் 73 கணக்கெடுப்பாளா்கள், 15 மேற்பாா்வையாளா்கள் ஈடுபட்டுள்ளனா். கால்நடைகள் வளா்ப்போா் மற்றும் கால்நடைகள் இல்லாத வீடுகள், அரசு நிறுவனங்கள், தனியாா் பண்ணைகள், வழிபாட்டுத் தலங்கள், கோசாலைகள் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
கால்நடைகள் வளா்ப்போரின் பெயா், முகவரி, ஆதாா் எண், கைப்பேசி எண், கால்நடைகளின் எண்ணிக்கை, பால் உற்பத்தி, கோழிகளில் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி, தெரு நாய்கள் மற்றும் வீட்டில் வளா்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியில் பதிவு செய்யப்படும்.
எனவே, கால்நடைகள் கணக்கெடுப்புப் பணிக்கு வருபவா்களிடம் உரிய விவரங்களை வழங்கி பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில், கால்நடை பாராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சத்யநாராயணன், துணை இயக்குநா் திருமூலன், மருத்துவா் நீலவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.