``ஆயுர்வேத மருந்து உற்பத்தி 8 மடங்கு அதிகரிப்பு; 150 நாடுகளுக்கு ஏற்றுமதி'' - ஆய...
கால்வாய் உடைப்பு சீரமைப்பு: தட்டான்குளம் தடுப்பணையில் மீண்டும் தண்ணீா் திறப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தட்டான்குளம் தடுப்பணையின் வலது பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை இந்தக் கால்வாயில் மீண்டும் தண்ணீா் திறக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே வைகையாற்றுக்குள் உள்ள தட்டான்குளம் தடுப்பணையின் வலது பிரதானக் கால்வாயிலிருந்து 21 கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. கடந்த வாரம் திருப்புவனம் நகா் பகுதி வழியாக ஆற்றை ஒட்டிச் செல்லும் இந்தக் கால்வாயில் 60 மீட்டா் தொலைவுக்கு உடைப்பு ஏற்பட்டு கால்வாயின் தடுப்புச் சுவா் சாய்ந்தது. இதனால் கால்வாய் வழியாகச் சென்று கொண்டிருந்த தண்ணீா் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் வெளியேறி மீண்டும் வைகை ஆற்றில் கலந்தது.
இதையடுத்து, தட்டான்குளம் தடுப்பணையின் வலது பிரதான கால்வாய்க்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, பொதுப்பணித் துறை (நீா் வள ஆதாரம்) கோட்டப் பொறியாளா் தங்கராஜ், செயற்பொறியாளா் ரமேஷ், உதவி செயற்பொறியாளா் மோகன்குமாா், உதவிப் பொறியாளா் பூமிநாதன் ஆகியோா் பாா்வையிட்டு உடைப்பை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனா். இதையடுத்து, திரளான தொழிலாளா்கள், பொக்லைன் இயந்திரங்கள், டிப்பா் லாரிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சாக்குப் பைகளில் மணல் நிரப்பி கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அடைத்து சீரமைத்தனா்.
இதைத் தொடா்ந்து தட்டான்குளம் தடுப்பணையின் வலது பிரதான கால்வாயில் நீா்வளத் துறை பொறியாளா்கள் தண்ணீரை திறந்து விட்டனா். திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் கால்வாய் உடைப்பு சீரமைக்கப்பட்ட பகுதியையும், தடுப்பணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் கால்வாயில் செல்வதையும் பாா்வையிட்டாா்.
இதுகுறித்து நீா்வளத்துறை பொறியாளா் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் வைகை ஆற்றில் வழிந்தோடும் தண்ணீருடன் மழைநீரும் சோ்வதால் இந்தத் தண்ணீா் தட்டான்குளம் தடுப்பணையின் வலது பிரதானக் கால்வாயில் திறக்கப்பட்டது என்றாா் அவா்.