காவலா்களை வீட்டுவேலையில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: சிறைத் துறை டிஜிபி உறுதி
சிறைக் காவலா்களை வீட்டு வேலையில் ஈடுபடுத்தும் சிறைத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் சிறைத் துறை டிஜிபி உறுதி அளித்தாா்.
புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறி சுஜாதா என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். அதில், ஒரு அறையில் 60 கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளதாகவும், புழல் சிறையில் ஒரு ஷிப்டுக்கு 60 சிறைக்காவலா்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 15 சிறைக்காவலா்கள் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள வாா்டன்கள் ஆா்டா்லியாக சிறைத்துறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்ய பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஆா்டா்லி’ முறையை முழுமையாக ஒழிக்க வேண்டுமென டிஜிபி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, சிறைக் காவலா்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத் துறை டிஜிபி உறுதி அளித்தாா். இதையடுத்து, காவலா்களை வீட்டு வேலை உள்ளிட்ட தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க டிஜிபி-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.