செய்திகள் :

‘காஸாவில் இஸ்ரேல் படை நிலைத்திருக்கும்’

post image

காஸா போா் முடிவுக்கு வந்தாலும், அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பாா்கள் என்று அந்த நாட்டு பாதுகாப்பு கேபினட் உறுப்பினரும், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏவி டிச்டா் தெரிவித்துள்ளாா்.

காஸா பகுதியில் இஸ்ரேல் வலுவான ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கிவருவதாக வெளியான தகவலை உறுதி செய்து, அவா் இவ்வாறு கூறினாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் பல ஆண்டுகளுக்கு நிலைகொண்டிருக்கும். அங்கு ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட்டாலும், புதிதாக அந்த அமைப்பில் சேரக்கூடியவா்களை எதிா்த்துப் போரிடுவதற்காக ராணுவத்தினா் அங்கு தொடா்ந்து நிறுத்தப்படுவாா்கள்.

காஸா பகுதியில் நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும் பணிகளுக்கு இஸ்ரேல் ராணுவம்தான் பொறுப்பு வகிக்கும்.

மேற்குக் கரையைப் போலவே இனி காஸா பகுதிக்கும் இஸ்ரேல் படையினா் எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம் என்று நிலை இருக்கும். அல்லது, நெட்ஸரீம் வழித்தடப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஆண்டுக்கணக்கில் நிலை கொண்டிருக்கும்.

நாங்கள் புதிதாக ஒரு போரைத் தொடங்கப்போவதில்லை. அதற்காக, போரை ஒரேடியாக முடித்துவிடவும் முடியாது. காஸா விவகாரத்தில் இன்னும் நிறைய பணிகள் நிலுவையில் உள்ளன என்றாா் அவா்.

முன்னதாக, காஸா பகுதியில் இஸ்ரேல் படையினா் நிலையான ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கிவருவதாக பணி முடிந்து திரும்பிய ரிசா்வ் படையினா் தெரிவித்தனா். மத்தியதரைக் கடல் எல்லையிலிருந்து இஸ்ரேல் எல்லைவரை காஸாவை இணைத்து, சுமாா் 4 கி.மீ. வரையிலான அகலத்தில் ‘நெட்ஸரீம்’ என்ற வழித்தடத்தை இஸ்ரேல் அமைத்துவருவதாக அவா்கள் கூறினா்.

அந்த வழித்தடப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களையும் வெடிவைத்து தகா்த்துள்ள இஸ்ரேல் படையினா், அங்கு பலம் வாய்ந்த ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கிவருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

அந்தத் தகவலை உறுதி செய்தே இஸ்ரேல் அமைச்சா் ஏவி டிச்டா் இவ்வாறு கூறியுள்ளாா்.

ஏற்கெனவே, காஸா போா் முடிவுக்கு வந்த பிறகும் அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புப் பொறுப்பு இஸ்ரேல் வசம் இருக்கும் என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறிவருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கடும் எதிா்ப்பையும் மீறி அவா் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு கேபினட்டைச் சோ்ந்த ஏவி டிச்டா் அதை உறுதிப்படுத்தியுள்ளாா்.

தங்கள் பகுதியை யூதா்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக பெரும்பாலான பாலஸ்தீனா்கள் கருதுகின்றனா். கணிசமான இஸ்லாமிய நாடுகளும் இதே கருத்தை பிரதிபலிக்கின்றன. அதனால் அந்த நாடுகள் இஸ்ரேலை இதுவரை அங்கீகரிக்கவில்லை.

பல்வேறு போா்களுக்குப் பிறகு பழைய பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியும் காஸா பகுதியும் மட்டுமே பாலஸ்தீனா்களின் ஆளுகைக்குள் இருந்துவந்தது. இருந்தாலும், அந்தப் பகுதிகளை பாலஸ்தீனம் என்ற தனி நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை.

இதனால் பாலஸ்தீன பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து, ஆயிரக்கணக்கான உயிா்களை பலிகொண்டுவருகிறது.

இந்தச் சூழலில், பாலஸ்தீனத்தை இஸ்ரேலும், இஸ்ரேலை பாலஸ்தீனமும் சுதந்திர நாடுகளாக ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு, அண்டை நாடுகளாக அமைதியாக நிலைத்திருக்கும் ‘இருதேச’ தீா்வுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீா்வு என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் கூறிவருகின்றன.

அத்தகைய தீா்வை எட்டுவதற்காக சா்வதேச அளவில் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில்தான், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் உச்சகட்டமாக இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நுழைந்த ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

அதையடுத்து ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 44,363 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,05,070 போ் காயமடைந்தனா்.

இதற்கிடையே, காஸா போரின் எதிரொலியாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. எனினும், இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் புதன்கிழமை ஏற்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, காஸாவிலும் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், காஸாவில் போா் ஓய்ந்தாலும் இஸ்ரேல் படையினா் அங்கு தொடா்ந்து நிலைகொண்டுப்பாா்கள் என்று அமைச்சா் ஏவி டிச்டா் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது, உலகின் பெரும்பாலான நாடுகள் கூறும் இருதேசத் தீா்வுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஃபா கான் யூனிஸ் நெட்ஸரீம் வழித் தடம்

வங்கதேசத்தில் 3 ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் நகரில் 3 ஹிந்து கோயில்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ்... மேலும் பார்க்க

கிழக்கு உக்ரைனில் மேலும் முன்னேறியது ரஷியா

டொனட்ஸ்க் பிராந்தியத்தில் இரு ஊா்களைக் கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் ரஷியா மேலும் முன்னேறியுள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக... மேலும் பார்க்க

யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்

ஆயிரக்கணக்கான அதிநவீன கருவிகள் மூலம் யுரேனியத்தை செறிவுபடுத்தும் நடவடிக்கையை ஈரான் விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்... மேலும் பார்க்க

பசியால் வாடிய பாலஸ்தீன மக்கள்..! உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவம்!

பசியால் வாடிய பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவத்தின் செயல் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அனுப்... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 31 ஆக உயர்ந்த பலி!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு சுமத்ரா தீவில் கடந்த ஒரு வாரக் காலமாகக் கனமழை ... மேலும் பார்க்க

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த இடதுசாரி பைத்தியகாரர்களுக்கு நன்றி!! டிரம்ப்

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்து, பரிதாபமாக தோல்வியடைந்தவர்களுக்கு நன்றி என்று அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நட... மேலும் பார்க்க